விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நேற்று மதில் சுவருடன் இருந்த கேட் இடிந்து விழுந்து இரண்டு சிறுமிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அடுத்துள்ள கொங்கலாபுரம் பகுதியில் வசித்துவரும் ராஜாமணி என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்பு வீட்டின் பாதுகாப்பிற்காக மதில் சுவருடன் இரும்பு கேட் ஒன்றை அமைத்துள்ளார். இந்நிலையில் நேற்று அரையாண்டு தேர்வு விடுமுறையில் வீட்டிலிருந்த ராஜாமணியின் ஒன்பது வயது மகள் கமாலிகா வீட்டிற்கு வந்திருந்த உறவுக்கார சிறுமியான 4 வயது ரிஷிகா ஆகியோர் கேட்டின் மீது ஏறி விளையாடிக் கொண்டிருந்தனர்.

Advertisment

அப்போது திடீரென தடுப்புச் சுவருடன் இரும்பு கேட் சரிந்து விழுந்தது. இதில் இடிபாட்டில் சிக்கி இரண்டு சிறுமிகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உடல்கள் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சிறுமிகளின் உடல்களை பார்த்து பெற்றோர்கள் மற்றும் அங்கிருந்தவர்கள் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. கேட்டுடன் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்து இரண்டு சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கேட்டிற்காக அமைக்கப்பட்ட அந்த பில்லர் வலிமையாக கட்டப்படாததே இந்த உயிரிழப்புக்கு காரணம் என அந்த பகுதி மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சிவகாசி நகர் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கட்டிட காண்ட்ராக்டரிடம் விசாரணை நடத்த இருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் அமைக்கப்பட்டுள்ள இதுபோன்ற கான்கிரீட் பில்லர்கள் சரியான வலிமையுடன் அமைக்கப்பட்டிருக்கிறதா என்பதை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும் என காவல்துறை தரப்பில் எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisment