புதுக்கோட்டை மாவட்டத்தின் 2வது பெரிய நகரம் அறந்தாங்கி. பல ஆயிரம் மக்கள் வந்து செல்லும் ஊர். ஏராளமான வணிக நிறுவனங்கள். மக்கள் அதிகம் கூடுதால் வணிகம் செய்ய சரியான இடமாக அறந்தாங்கி நோக்கி தொழில் செய்வோர் வருகையும் அதிகம். ஆனால் கடந்த சில மாதங்களாக நடக்கும் திருட்டுச் சம்பவங்களால் ஏன் இங்கே தொழில் செய்ய வந்தோம் என்று நினைக்கும் அளவில் உள்ளனர் வணிகர்கள். காரணம், கடந்த சில மாதங்களில் பைக் திருட்டுகள் தொடங்கி கோயில் உண்டியல்கள், வீடு, கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு என நாளுக்கு நாள் திருட்டுச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது தான். 

Advertisment

திருட்டு நடந்து விட்டால் சிசிடிவி வைத்தால் திருடனை பிடித்து விடலாம். இவ்வளவு முதல் போடுறவங்க ஒரு சிசிடிவி வைத்தால் குறைந்தா போகும் என்று போலிசார் தொடர்ந்து வலியுறுத்தியதால் பெரும்பாண்மையான கடைகளில் சிசிடிவி வைக்கப்பட்டுவிட்டது. ஆனால் அதன் பிறகு தான் அதிகமான திருட்டுகளும் நடக்கிறது.  திருட்டு சம்பவம் நடந்தவுடன் புகார் வாங்கிக் கொண்டு விசாரணைக்கு வரும் போலீசார் சிசிடிவி காட்சிகளையும் வாங்கிக் கொண்டு போவதோடு முடிந்துவிடுகிறது. இதுவரை எந்த ஒரு திருடனும் பிடிபடுவதில்லை.

Advertisment

இதேபோல தான் நகரின் மையப் பகுதியில் தாலுகா ஆபிஸ் ரோட்டில் பள்ளிவாசல் அருகில் பிரதான சாலையில் உள்ள பெண்களுக்கான தையல் பொருட்கள் விற்பனை செய்யும் கதிரேசன் என்பவரின் லட்சுமி ஸ்டோர்ஸ் கடையில் இன்று 15 ந் தேதி அதிகாலை 4.12 மணிக்கு ஷட்டரில் பூட்டப்பட்டிருந்த பூட்டுகளை உடைத்துக் கொண்டு டிராவல் பேக்குடன் உள்ளே நுழையும் பேண்ட், சட்டை, ஷூ, மெடிக்கல் க்ளவுஸ் போட்ட டிப்டாப் ஆசாமி நேராக மேஜைக்கு போய் திறந்து பார்க்க பூட்டி இருப்பது தெரிந்ததும் தனது செல்போனை எடுத்து லைட் அடித்து மேஜை லாக்கை பார்த்த பிறகு, தான் கொண்டு வந்த டிராவல் பேக்கை திறந்து மடக்கி வைக்கக்கூடிய திருப்புளியை எடுத்து நீளமாக விரித்து மேஜையை நெம்பி திறந்து அதில் இருந்த ரூ.1.65 லட்சம் பணத்தை எடுத்து தனது பேண்ட் பாக்கெட்களிலும் சட்டைப் பாக்கெட்டிலும் திணித்துக் கொண்டு மீண்டும் திருப்புளியை மடக்கி பேக்கில் வைத்துக் கொண்டு வந்த வழியில் சென்று விடுகிறான்.

சுமார் 9 நிமிடங்களில் ரூ.1.65 லட்சம் பணத்தை திருடிச் செல்லும் காட்சி பதிவாகி உள்ளது. காலை கடை திறக்க வந்த கதிரேசன் அதிர்ச்சியடைந்து அறந்தாங்கி காவல் நிலையத்தில் சிசிடிவி காட்சி பதிவுடன் புகார் கொடுத்துள்ளார். இதேபோல அருகில் உள்ள மெடிக்கல் கடையை உடைத்து சென்று உள்ளே தேடிய மர்ம நபருக்கு பணம் சிக்கவில்லை. ஆனால் திருடன் பயன்படுத்திய மருத்துவ கையுறை அங்கிருந்து எடுத்திருக்கலாம் என்று கூறுகின்றனர். அறந்தாங்கி நகரில் தொடர் திருட்டு நடந்தும் இதுவரை ஒரு திருடன் கூட பிடிபடவில்லை.

Advertisment

இதுகுறித்து அறந்தாங்கி வர்த்தக சங்க  தலைவர் தங்கதுரை கூறும் போது, ''அறந்தாங்கி நகரில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பட்டுக்கோட்டை ரோட்டில் 3 கடைகளை உடைத்து ரூ.1.50 லட்சம் திருட்டு போனது உடனே அறந்தாங்கி காவல் நிலையத்தில் சிசிடிவி பதிவுகளுடன் புகார் கொடுத்தோம் ஒன்றும் பலனில்லை. அடுத்து இதே நகரில் பகலில் 3 கடைகளில் பூட்டை உடைத்து சுமார் ரூ.3 லட்சம் மதிப்பில் திருட்டு போனது அப்பவும் சிசிடிவி பதிவுகளுடன் தான் புகார் கொடுத்தோம் இதுவரை ஒரு திருடனையும் பிடிக்கவில்லை. 2 நாள் முன்பு அக்னிப் பஜாரில் 2 கடைகளில் ரூ.15 ஆயிரம் வரை திருடு போய் உள்ளது.

இன்று அதிகாலை நகரின் மையப்பகுதியில் 2 கடைகளில் பூட்டை உடைத்து ஒரு கடையில் ரூ.1.65 லட்சம் பணம் திருடு போய் உள்ளது. இதற்கும் சிசிடிவி பதிவு கொடுத்திருக்கிறோம். ஆனால் யாரையும் பிடிக்கவில்லை. போலிசார் தொடர்ந்து மெத்தனமாக இருப்பதால் திருட்டு சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதனால் வியாபாரிகள் ரொம்பவே அச்சத்தில் இருக்கிறோம். தீபாவளி வியாபாரம் செய்ய வேண்டிய நேரத்தில் திருட்டு பயத்தால் ரொம்பவே அச்சத்தில் இருக்கிறோம்'' என்றார்.

திருட்டை தடுக்க, திருடனைப் பிடிக்க கேமரா வைங்கனு சொன்னது போலீசார் தான். இப்ப கேமராவில் பதிவான முகங்களைக்கூட பிடிக்கல என்கிறார்கள் பொதுமக்கள்.