முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக பொருளாளருமான டி.ஆர். பாலு எம்.பி.யின் மனைவியும், தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் தாயாருமான ரேணுகா தேவி (வயது 80) காலமானார். இவர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று (19.08.2025) உயிரிழந்தார். அவரது உடல் இறுதி மரியாதைக்காகச் சென்னை தியாகராயநகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று மாலை 5 மணியளவில் பெசன்ட்நகர் மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அவரது மறைவுக்குப் பலரும் அஞ்சலி செலுத்தியும், இரங்கல்களைத் தெரிவித்தும் வருகின்றனர். 

Advertisment

அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “முன்னாள் ஒன்றிய அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலுவின் துணைவியாரும், தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் தாயாருமான ரேணுகா தேவி பாலு மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். கணவரும் மகனும் பொது வாழ்க்கையில் ஈடுபட உறுதுணையாக இருந்து, தமது அன்பாலும் அரவணைப்பாலும் அவர்களது பணிகளுக்கு ஊக்கமளித்து, அமைதியாக அவர்களது வெற்றியின் பின்னணியாக இயங்கியவர் ரேணுகா தேவி பாலு. அத்தகைய பெருந்துணையின் மறைவு எவராலும் ஈடுசெய்யவியலாத பேரிழப்பு. 

அன்னாரை இழந்து தவிக்கும் டி.ஆர்.பாலு, டி.ஆர்.பி. ராஜா ஆகியோருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தியாகரயநகருக்கு சென்று அவரது உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.