கார்த்திகை திருநாளை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கடந்த சில தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவைத் தொடர்ந்து, கார்த்திகை தீபத் திருநாளான நேற்று முன்தினம் (03.12.2025), திருப்பரங்குன்றம் மலையின் உச்சியின் மீதுள்ள தீபத்தூணில் ஏற்றாமல் பிள்ளையார் கோயிலில் அருகில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை என்று இந்து அமைப்பினர், காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போராட்டம் செய்தனர்.
அதனை தொடர்ந்து, போராட்டம் செய்த இந்து அமைப்பினரை போலீசார் கைது செய்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதனை தொடர்ந்து, திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவை அம்மாவட்ட நிர்வாகம் அமல்படுத்தியது. இதனையடுத்து மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மதுரை மாநகர காவல் ஆணையர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராம ரவிக்குமார் நேற்று முன்தினம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடுத்திருந்தார். இந்த வழக்கு மீதான விசாரணை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் நேற்று (04.12.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி, மதுரை ஆட்சியரின் 144 தடை உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
மேலும், திருப்பரங்குன்றம் தர்கா அருகே உள்ள தீபத்தூணில் இன்று (அதாவது நேற்று) தீபம் ஏற்ற வேண்டும் என்றும், இந்த உத்தரவை நிறைவேற்றிய நகலை நாளை (அதாவது இன்று - டிசம்பர் 05) காலை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்து இந்த வழக்கு விசாரணையை இன்று காலை 10:30 மணிக்கு ஒத்திவைத்தார். இத்தகைய பரபரப்பான சூழலில் நீதிமன்ற உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் தீபத்தூணில் நேற்று தீபமேற்ற ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் திருப்பரங்குன்றத்துக்கு வருகை தந்தார். மேலும், பா.ஜ.கவினர் ஏராளமானோர் அங்கு குவிந்தனர். அதனால் அங்கிருந்து அனைவரும் கலைந்து செல்ல வேண்டும் என்று போலீசார், அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து தடுத்து நிறுத்தினர். ஆனாலும், பா.ஜ.க தொண்டர்கள் அங்கிருந்து கலைந்து செல்லாமல் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/05/thiruparankundram-issue-bjp-nainar-h-raja-2025-12-05-15-33-43.jpg)
எனவே கலைந்து செல்லவில்லை என்றால் கைது செய்யப்படுவீர்கள் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்த நிலையில், போலீசாருக்கும் பா.ஜ.கவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக அனுமதியின்றி போராட்டம் நடத்தியதால் பா.ஜ.க நயினார் நாகேந்திரன், பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா இந்து அமைப்பினர் மற்றும் பா.ஜ.க தொண்டர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் திருப்பரங்குன்றத்தில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இதனையடுத்து கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர். இருப்பினும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நயினார் நாகேந்திரன் உள்பட 93 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதாவது சட்டவிரோதமாக அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட்டது, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியது, பொது அமைதி பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக டி.ஆர். பாலு நாடாளுமன்ற மக்களவையில் இன்று (05.12.2025) பேசுகையில், “நூற்றாண்டுகளுக்கு மேலாக தீபம் ஏற்றும் இடத்தில் இந்த ஆண்டும் அறநிலையத்துறை சார்பில் தீபம் ஏற்றப்பட்டது. அதாவது கடந்த 1996, 2017ஆம் ஆண்டுகளில் வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்புகளின் படி பாரம்பரிய இடத்திலேயே தீபம் ஏற்றப்பட்டது. மதவாத சக்திகள் தமிழ்நாட்டில் அமைதியை சீர்குலைக்க திட்டமிடுகின்றனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/05/judgement-gr-swaminathan-2025-12-05-15-34-21.jpg)
அதனால் தான் அவர்கள் பிரச்சனை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் நீதிமன்றம் சென்றனர். அதன்படி நீதிபதி சுவாமிநாதனின் அவர்களுக்கு சாதகமான தீர்ப்பை வழங்கியுள்ளார். நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் உத்தரவு தமிழ்நாட்டில் மத ரீதியிலான பதற்றத்திற்கு வழிவகுத்துள்ளது. திருப்பரங்குன்றத்தில் பதற்றம் ஏற்பட யார் காரணம்.நாட்டை ஆளும் கட்சி மதரீதியிலான கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறது” எனப் பேசினார். அதே சமயம் அவர் டி.ஆர். பாலு பேச்சுக்கு மக்களவையில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜுஜூ, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட பாஜக எம்.பி.க்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்
Follow Us