tp chathiram incident - 3 people including a minor arrested Photograph: (police)
சென்னை டிபி சத்திரம் பகுதியில் திருந்தி வாழ்ந்த ரவுடி ஒருவர் பட்டப்பகலில் ஓட ஓட மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நேற்று பரபரப்பை ஏற்படுத்திய சிறார் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை டிபி சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் புல்கான் எனும் ராஜேஷ். பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ராஜேஷ் கடந்த 5 வருடமாகவே திருந்தி பந்தல் அமைக்கும் பணிகளைச் செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று ஹெல்மெட் அணிந்தபடி அங்கு வந்த மர்ம நபர்கள் ராஜேஷை ஓட ஓட வெட்டிப் படுகொலை செய்தனர். பெற்றோர்கள், முதியவர்கள் கையெடுத்து கும்பிட்டும் விடாத அந்த கும்பல் ராஜேஷை படுகொலை செய்துள்ளது.
விசாரணைக்காக அங்கு வந்து துணை ஆணையர் காலில் விழுந்த ராஜேஷின் பெற்றோர்கள் 'திருந்தி வாழ்வதாக பலமுறை மனு கொடுத்த நிலையில் மர்ம ரவுடி கும்பல் என் மகனை கொலை செய்துள்ளது' என முறையிட்டனர். அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி கொலை செய்த நபர்களை போலீசார் தேடினர். கொலை செய்யப்பட்ட ராஜேஷ் அதிமுக பிரமுகர் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் பட்டப்பகலில் ராஜேஷை எட்டு பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்யும் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக யுவனேஷ், சாய்குமார் மற்றும் ஒரு சிறார் உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில் 17 ஆண்டுகளுக்கு முன்பு கடந்த 2008 ஆம் ஆண்டு யுவனேஷின் தந்தை செந்தில்குமாரை ராஜேஷ் படுகொலை செய்த நிலையில் அதற்கு பழிவாங்க கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மற்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.