தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் சீசன் களைகட்டி வருகிறது. இதனால் அங்கு வெளியூர் மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான சுற்றலா பயணிகள், பொதுமக்கள் எனப் பலரும் வேன், பைக்  கார் உள்ளிட்ட வாகனங்களில் வந்து அருவிகளில் குளித்துவிட்டுச் செல்கின்றனர். அந்த வகையில் பழைய குற்றால அருவிக்கு இன்று (30.07.2025) காலை தூத்துக்குடியில் இருந்து 20 பேருடன் வேன் ஒன்றில் வந்தவர்கள் குளித்துவிட்டு மீண்டும் திரும்பிச் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்புறமாகக் குற்றாலத்திற்கு வந்து கொண்டிருந்த சுற்றலா பயணிகள் சென்ற ஆட்டோ மீது கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குற்றால காவல்துறையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு தென்காசி மாவட்ட அரசு தலைமை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் ஆட்டோவில் பயணித்த சென்னையைச் சேர்ந்த யாசின் என்ற 55 வயது பெண் உயிரிழந்துள்ளார். 

மேலும் 9 பேருக்குச் சிகிச்சையானது அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில்  ஆட்டோ ஓட்டுநரும் பலத்த காயம் அடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மற்றொரு புறம் இந்த விபத்து சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றாலம் அருகே சுற்றலா வேன் மீது ஆட்டோ மோதி கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியிலும், சுற்றுலாப் பயணிகள் மத்தியிலும் பெரும் பரபரப்பயும்,சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.