கடந்த சில நாட்களாக ஜவ்வாது மலையிலிருந்து அமிர்தி வழியாக கண்ணமங்கலம் பகுதிக்குள் செம்மரக் கட்டைகளைக் கொண்டு வந்து குடோனில் பதுக்கி வைத்து ஆந்திர மாநிலத்துக்கு கடத்தப்படுவதாக சிறப்புப் புலனாய்வுக் காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சிறப்புப் புலனாய்வுக் காவல்துறையினர் கண்ணமங்கலம் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், நவம்பர் 18-ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே மேல்நகர் கிராமத்தில் வசிக்கும் முன்னாள் ஒன்றியக் குழு கவுன்சிலரும் அதிமுக மாவட்டப் பிரதிநிதியுமான எம்.சி. ரவி என்பவருக்கு சொந்தமான வீட்டை போலீசார் சோதனை செய்தனர். அப்போது வீட்டிற்குள் சுமார் இரண்டு டன் செம்மரக் கட்டைகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் அவற்றைப் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து காவல்துறையினரும் வனத்துறையினரும் இது குறித்து அக்கம் பக்கத்தில் விசாரணை நடத்தியபோது, ரவி கடந்த ஆறு மாதங்களாக போளூர் அருகே உள்ள தனது மகள் வீட்டில் வசித்து வருவதும், இந்த வீட்டை ரவியின் அண்ணன் மகன் ரமேஷ் என்பவர் பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது.
ரமேஷ் குறித்து விசாரித்தபோது, அவர் மீது ஏற்கெனவே ஆந்திர மாநிலத்தில் செம்மரக் கட்டை கடத்தல் வழக்கு உள்ளது எனவும், அந்த வழக்கில் கைதாகி ஆந்திர சிறையில் இருந்த அவரை ரவி நேரில் சென்று ஜாமீனில் எடுத்துக் காப்பாற்றியதும் தெரியவந்தது. அதன்பிறகு வழக்கில் ஆஜராகாமல், செம்மரம் வெட்ட ஆட்களை அனுப்பியது, ஜவ்வாது மலையில் செம்மரங்களை வெட்டியது உள்ளிட்ட குற்றங்களால் இரு மாநில போலீசாரும் ரமேஷைத் தேடி வருவதாகக் கூறப்படுகிறது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/19/5-2025-11-19-15-42-05.jpg)
பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக் கட்டைகளை சிறப்புப் புலனாய்வுத் துறையினர் வனத்துறை மூலம் மதிப்பீடு செய்தனர். 106 கட்டைகள் கொண்ட சுமார் 2 டன் எடையுள்ள இவற்றின் சந்தை மதிப்பு ரூ.50 லட்சம் வரை இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அதிமுக பிரமுகர் ரவியின் அண்ணன் மகன் ரமேஷை காவல்துறையினரும் வனத்துறையினரும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
அதேநேரத்தில், அண்ணன் மகன் ரமேஷ் செய்யும் சட்டவிரோதச் செயல்கள் ரவிக்கு நன்றாகத் தெரிந்திருக்கும் எனவும், ரவிதான் காவல்துறையிடமிருந்தும் ஆந்திர போலீசாரிடமிருந்தும் ரமேஷை காப்பாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது. அவரது வீட்டிலேயே செம்மரக் கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது ரவிக்கு எப்படித் தெரியாமல் போகும் என்ற கேள்வியையும் அக்கிராம மக்கள் எழுப்புகின்றனர். அதிமுக பிரமுகரை காப்பாற்றுவதற்காகவே காவல்துறை விசாரணையை மெத்தனமாக நடத்துகிறதா என்ற சந்தேகமும் அப்பகுதி மக்களிடையே எழுந்துள்ளது.
Follow Us