அக்டோபர் 1ஆம் தேதியான நேற்று (01.10.2025 - புதன்கிழமை) ஆயுத பூஜை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து அக்டோபர் 2ஆம் தேதியான இன்று (02.10.2025 - வியாழக்கிழமை) விஜயதசமி பண்டிகை கொண்டாடப்பட்டு, காந்தி ஜெயந்தியும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு அரசு இரு நாட்கள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு அக்டோபர் 4 மற்றும் 5ஆம் தேதிகளில் சனி மற்றும் ஞாயிறு விடுமுறை வருகிறது. இதன் காரணமாக இடையில் உள்ள அக்டோபர் 3ஆம் தேதியை (03.10.2025 - வெள்ளிக்கிழமை) அரசு பொது விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் எனப் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இருப்பினும் அக்டோபர் 3ஆம் தேதி அரசு பொது விடுமுறை அல்ல எனத் தமிழக அரசு தெரிவித்திருந்தது. மேலும் இந்த செய்தியை உறுதிப்படுத்தும் வகையில் அக்டோபர் 3ஆம் தேதி அரசு பொது விடுமுறை அல்ல என்றும் தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அக்டோபர் 3ஆம் தேதியான நாளை (03.10.2025) அரசு விடுமுறையாக அறிவித்து புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாகப் புதுச்சேரி அரசு சார்பில் தெரிவிக்கையில் பள்ளி மற்றும் கல்லூரியைத் தொடர்ந்து அரசு அலுவலகங்களுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புதுச்சேரியில் 5 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளதால் பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.