வரவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, விருப்ப மனு, தொகுதிப் பங்கீடு, தேர்தல் பிரச்சாரம் எனத் தீவிரமாகத் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி தேர்தலுக்கான பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது.

Advertisment

இதனிடையே, தவெகவுக்கு விஜய் கோரிய ‘விசில்’ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. தவெக போட்டியிடும் 234 தொகுதிகளிலும் பொதுச் சின்னமாக விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. அங்கீகரிக்கப்படாத கட்சியான தவெக, தேர்தல் ஆணைய விதிப்படி கணக்குகளை தாக்கல் செய்துள்ளதால் பொதுச் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தாம் கேட்ட விசில் சின்னத்தையே தேர்தல் ஆணையம் ஒதுக்கியதால் விஜய் உள்ளிட்ட தவெகவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Advertisment

இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் தலைமையில் இன்று (25-01-26) சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. கடந்த 20ஆம் தேதி சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் தலைமையில் தேர்தல் அறிக்கை குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தேர்தல் பரப்புரை குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த சூழ்நிலையில், தவெக தலைவர் விஜய் தலைமையில் மாநில மாவட்ட அளவிலான செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஜனநாயகன் படத்திற்கான சென்சார் சான்றிதழ் விவகாரம், கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சிபிஐ விசாரணை என தொடர் நெருக்கடிகளைச் சந்தித்து வரும் விஜய் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisment