Today is the last day to submit SIR forms
பீகாரைத் தொடர்ந்து தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அடுத்தாண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை ஒட்டி, அந்தந்த மாநிலக் கட்சிகளும் தேசியக் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்தச் சூழலில், தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை கடந்த நவம்பர் 4ஆம் தேதி முதல் தேர்தல் ஆணையம் நடத்தி வந்தது.
அதன்படி, மாநிலங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் அரசியல் கட்சிகளின் பூத் ஏஜெண்ட்கள் துணையோடு தேர்தல் ஆணைய அதிகாரிகள், வாக்காளர்களை கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். எஸ்.ஐ.ஆர் (SIR) படிவங்களை வீடு வீடாக கொடுத்து இடம்பெயர்ந்தவர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர்களாக உள்ளவர்கள், படிவங்களை நிரப்பாதவர்கள், ஆவணங்களை வழங்காதவர்கள் ஆகியவற்றவர்களை கண்டறிந்து திருத்தப் பணிகளை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை கடந்த 4ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், முதலில் 7 நாள் அவகாசம் நீக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து இரண்டாம் முறையாக, 3 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஒப்படைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் (14-12-25) நிறைவடைகிறது. இன்றைக்குள் படிவத்தை பூர்த்தி செய்து வழங்காதவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் வரும் 19ஆம் தேதி வெளியாகும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. படிவங்கள் வழங்க இன்றே கடைசி நாள் என்பதால் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தங்கள் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
Follow Us