கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள அண்ணாமலைநகரில் ரூ.11 லட்சம் மதிப்புள்ள அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அண்ணாமலைநகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அம்பேத்கர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராம்குமார், சுரேஷ் முருகன் மற்றும் காவலர்கள் மணிகண்டன், பாலாஜி, கோபி, ரமணி ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று போதைப் பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பெங்களூரு பகுதியில் இருந்து கடத்தி வரப்பட்ட ஹான்ஸ் பாக்கெட்டுகள் மூட்டைகளை வேளக்குடி மேம்பாலத்திற்குக் கீழே வைத்துக்கொண்டு, பெட்டிக்கடை விற்பனையாளர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் பங்கு பிரித்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற ரகசிய தகவல் கிடைத்தது.

Advertisment

இதையடுத்து, இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று, அங்கிருந்த மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி, தாண்டவன்குளம் பகுதியைச் சேர்ந்த மதனகோபால் மகன் பாரிவள்ளல் (26), தரங்கம்பாடி, அன்னப்பன்பேட்டையைச் சேர்ந்த மகாலிங்கம் மகன் மணிகண்டன் (26), கொள்ளிடம் அருகே உள்ள அளக்குடியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் செல்வராஜ் (60), சிதம்பரம் பழனிவேல் (65), சிதம்பரம் ஞானபிரகாசகுளத் தெருவைச் சேர்ந்த குணசேகரன் (70) ஆகிய 5 பேரையும் பிடித்து கைது செய்தனர். மேலும், அரசால் தடை செய்யப்பட்ட 15 ஹான்ஸ் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ.11 லட்சத்து 47 ஆயிரத்து 360 ஆகும். மேலும், இதில் தொடர்புடைய கீரப்பாளையம் தாளமுத்து மகன் செல்வராஜ், ஜெயங்கொண்டப்பட்டினம் சின்னப்பிள்ளை மகன் ராதாகிருஷ்ணன், சிதம்பரம் எடத் தெருவைச் சேர்ந்த கோவிந்தசாமி மகன் செல்வம் ஆகியோரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இதுகுறித்த தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார், அண்ணாமலைநகர் காவல் நிலையம் சென்று பறிமுதல் செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களின் மூட்டைகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்பவர்கள், கடத்தி வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த எட்டு மாதங்களில் 225 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 293 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 7 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 4600 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து புகையிலைப் பொருள்கள் மற்றும் கஞ்சா விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது,” என்றார்.