தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தாள்-1 தேர்வை நடத்தியது. இந்தத் தேர்வின் வினாத்தாளில், ‘பின்வரும் வைகுண்ட சுவாமிகளின் கூற்றுகளில் சரியானவற்றைத் தேர்வு செய்க’ என்ற வினாவுக்கு நான்கு விடைகள் வழங்கப்பட்டிருந்தன.
அதில் முதல் விடையில், வைகுண்ட சுவாமிகள் ‘முடிசூடும் பெருமாள்’ மற்றும் ‘முத்துக்குட்டி’ என்று அழைக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இது ஆங்கிலத்தில் ‘முடிவெட்டும் கடவுள் (The God of Hair Cutting)’ எனத் தவறாக மொழிபெயர்க்கப்பட்டிருந்தது. இந்த மொழிபெயர்ப்பு பிழை கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. மேலும், வினாத்தாளில் உள்ள வேறு சில வினாக்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் தவறாக இருந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்தக் கேள்வி அய்யா வைகுண்டரை அவமதிக்கும் வகையில் அமைந்ததாகக் கூறி, தமிழக அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மொழிபெயர்ப்பு பிழை குறித்தும், எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகளைத் தவிர்ப்பது குறித்தும் டிஎன்பிஎஸ்சி ஆலோசனை நடத்தி வருகிறது. மேலும், வினாக்களில் தவறு ஏற்பட்டால் வழக்கமாக வழங்கப்படும் முழு மதிப்பெண்ணை இந்த முறையும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.