தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) மூலம் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பப் போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. அதன்படி குரூப்-1, குரூப்-2, குரூப்-4 உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. அந்த வகையில் குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது.
அதில் துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளார், வணிக வரித்துறை துணை ஆணையர், ஊரக வளர்ச்சித்துறை துணை இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மற்றும் தொழிலாளர் துணை ஆனையர் உள்ளிட்ட பதவிகளுக்கான 70 காலி பணியிடங்கள் நிரப்பட உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டது. அதோடு உதவி வனப் பாதுகாவலர் 2 காலியிடங்களுக்கான குருப் 1 ஏ அறிவிக்கையில் வெளியாகியிருந்தது. இதற்கான முதல் நிலைத் தேர்வு கடந்த ஜூன் மாதம் 15ஆம் தேதி (15.06.2025) நடைபெற்றது.
இந்த நிலையில் குரூப் - 1 தேர்வின் முதல்நிலைத் தேர்வுக்கான முடிவுகள் இன்று (28.08.2025) வெளியிடப்பட்டுள்ளன. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கப்பட உள்ளானர். இந்த முதன்மை தேர்வு வரும் டிசம்பர் மாதம் 01.12.2025 முதல் 04.12.2025 ஆம் தேதி வரை சென்னையில் உள்ள மையத்தில் மட்டுமே நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குருப் - 1 பதவிக்கான காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையும் 78 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ஜூன் மாதம் முதல் நிலைத் தேர்வு நடைபெற்ற போது டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பிரபாகர் இன்னும் 2 மாதத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.