Advertisment

“தமிழ்நாடு முழு ஒத்துழைப்பினை வழங்கும்” - பிரதமருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!

cm-mks-3

இந்தியப் பொருட்களின் மீதான இறக்குமதி வரியினை அமெரிக்கா உயர்த்தியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே வர்த்தகத்தை மீட்டெடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று (16.08.2025) கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில், இரு நாடுகளுக்கும் பயனளிக்கக் கூடிய வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவதற்கு ஒன்றிய அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகளைப் பாராட்டுகிறேன்.

Advertisment

தேசிய நலன்களைப் பாதுகாப்பதற்கான ஒன்றிய அரசின் நிலைப்பாட்டை முழுமையாக ஆதரிக்கிறேன். தற்போதைய 25% வரி மற்றும் அதன் தொடர்ச்சியாக 50% வரி அதிகரிப்பு காரணமாக கடுமையான தாக்கங்களை எதிர்கொள்வதால், தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கும் கவலை அளிக்கும் ஒரு பிரச்சனை குறித்து  பிரதமர் மோடியின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். கடந்த நிதியாண்டில், இந்தியாவின் மொத்த பொருட்கள் ஏற்றுமதியான $433.6 பில்லியன் மதிப்பிலான பொருட்களில் 20 விழுக்காடு அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், தமிழ்நாட்டின் $ 52.1 பில்லியன் பொருட்களில் 31 விழுக்காடு அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அமெரிக்க சந்தையை தமிழ்நாடு அதிகமாகச் சார்ந்திருப்பதால், இறக்குமதி வரியின் தாக்கம், இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் அதிகமாக இருக்கும்.

Advertisment

இந்த வரிவிதிப்பு தமிழ்நாட்டின் உற்பத்தித் துறை மற்றும் வேலைவாய்ப்பில் குறிப்பிடத்தக்க பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்த வரிவிதிப்பினால் ஜவுளி, ஆடைகள், இயந்திரங்கள், ஆட்டோமொபைல்ஸ், ரத்தினக் கற்கள் மற்றும் நகைகள், தோல், காலணிகள், கடல் பொருட்கள் மற்றும் இரசாயனங்கள் துறைகளில் மிகவும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தத் துறைகள் அனைத்தும் அதிகத் தொழிலாளர்களை சார்ந்தவை என்பது இன்னும் கவலைக்குரியது. இதில் எந்தவொரு ஏற்றுமதி மந்தநிலையும் விரைவாக பெருமளவிலான பணி இழப்புகளுக்கு வழிவகுக்கும். 2024-2025ஆம் ஆண்டில் இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதியில் தமிழ்நாடு 28% பங்களித்தது. இது இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்களைக் காட்டிலும் மிகவும் அதிகம். குறிப்பாக, தமிழ்நாட்டில் ஜவுளித் துறை கிட்டத்தட்ட 75 இலட்சம் பேர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ளது. 

donald-treump

25% வரி மற்றும் முன்மொழியப்பட்டுள்ள 50% வரியின் காரணமாக, 30 இலட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. இந்த நெருக்கடியைத் தணிக்க, நமது ஏற்றுமதி போட்டித்தன்மைக்கு நீண்டகாலமாகத் தடையாக இருக்கும் கட்டமைப்பு சிக்கல்களைத் தீர்ப்பது அவசியம். இது தொடர்பாக, பாதிக்கப்பட்ட துறைகளைச் சேர்ந்த தொழில் அமைப்புகளுடன் தான் விரிவான ஆலோசனைகளை நடத்தினேன். இந்த ஆலோசனைகளின் அடிப்படையில், ஜவுளித் துறைக்கு இரண்டு அம்சங்களில், அதாவது, மனிதனால் உருவாக்கப்பட்ட இழை மதிப்புச் சங்கிலிக்கான ஜிஎஸ்டி விகிதங்களில் உள்ள முரண்பாடுகளை நீக்கி, தலைகீழ் வரி கட்டமைப்பை சரிசெய்தல், முழு சங்கிலியையும் 5% ஜிஎஸ்டி அடுக்குக்குள் கொண்டு வருதல் மற்றும் அனைத்து வகையான பருத்திக்கும் இறக்குமதி வரியில் இருந்து விலக்கு அளித்தல் ஆகியவற்றில் துரித நடவடிக்கை தேவைப்படுகிறது. 

கூடுதலாக, அவசரக் கடன் வரி உத்தரவாதத் திட்டத்தின் கீழ் (ECLGS) 30% பிணையமில்லாத கடன்களை 5% வட்டி மானியம் மற்றும் அசலைத் திருப்பிச் செலுத்துதலில் இரண்டு ஆண்டு தற்காலிக தடையுடன் நீட்டித்தல், RoDTEP நன்மைகளை 5% ஆக உயர்த்துதல், நூல் உட்பட அனைத்து ஜவுளி ஏற்றுமதிகளுக்கும் முன் மற்றும் பின் கடனை நீட்டித்தல் ஆகியவை நமது ஏற்றுமதி போட்டித்தன்மையை வலுப்படுத்துவதற்கான பிற முக்கியமான காரணிகளாக முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன. உலகளாவிய வர்த்தகத்தில் சுங்கவரி தாக்கங்கள் மற்றும் போட்டி அழுத்தங்கள் காரணமாக மற்ற துறைகளும் இதேபோன்ற சவால்களை எதிர்கொள்கின்றன. அதற்கு உடனடி நிவாரணம் வழங்கி, பணப்புழக்கத்தை மேம்படுத்தவும், செலவுச் சுமைகளைக் குறைக்கவும் சுங்கவரிகளால் பாதிக்கப்பட்ட அனைத்து ஏற்றுமதியாளர்களுக்கும் சிறப்பு வட்டி மானியத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதையும், அதிக சுங்கவரி சந்தை அபாயங்களை ஈடுகட்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் (FTAக்கள்) மற்றும் இருதரப்பு ஒப்பந்தங்களை விரைவுபடுத்துவதையும் ஒன்றிய அரசு பரிசீலிக்க வேண்டும். 

modi-mic-tn

பிரச்சினையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் செயல்படுத்தப்பட்டதைப் போன்று, அசலைத் திருப்பிச் செலுத்துவதில் சலுகை உள்ளிட்ட ஒரு சிறப்பு நிதி நிவாரணத் தொகுப்பு நமது ஏற்றுமதியாளர்களை ஆதரிக்க வேண்டியது அவசியம்.பிரேசில் அரசு அந்நாட்டு ஏற்றுமதியாளர்களுக்கு வரி ஒத்திவைப்பு மற்றும் வரிச் சலுகைகளை அறிவித்துள்ளதைப் போன்று, இந்தியாவிலும் இதுபோன்ற ஒரு முயற்சியை தாங்கள் எதிர்பார்க்கிறோம். தமிழ்நாட்டின் வலுவான உற்பத்தித் துறை, இதுவரை கண்டிராத ஒரு நெருக்கடியை தற்போது எதிர்கொள்கிறது. 

பல்வேறு துறைகளில் இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருகிறது. எனவே  பிரதமர் மோடி இந்த விஷயத்தில் அவசரமாகத் தலையிட்டு, சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் தொழில்துறையைச் சார்ந்தவர்களுடன் கலந்தாலோசித்திட வேண்டும். அதோடு, இந்த இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்கவும், வர்த்தகத்தை மீட்டெடுக்கவும் ஒன்றிய அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தமிழ்நாடு முழு ஒத்துழைப்பினை வழங்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

Tiruppur textiles letter mk stalin Narendra Modi America tax
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe