தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று மாநிலத் தலைவர் கு. தியாகராஜன் தலைமையில் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநிலச் செயலாளர் அருள்குமார் முன்னிலை வகிக்க, மாநிலப் பொருளாளர் உதயகுமார் வரவேற்புரை ஆற்றினார். மாநில ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் நன்றியுரை ஆற்றினார். இக்கூட்டத்தில் பல்வேறு  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கடந்த திங்கள்கிழமை  அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு மற்றும் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் அடங்கிய குழுவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

Advertisment

தமிழக அரசு கடுமையான நிதி நெருக்கடியிலும், கடன் சுமையிலும் இருந்தபோதிலும், ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களின் வாழ்வாதாரக் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மிகுந்த அக்கறையுடன் சிந்தித்து வருவதாகவும், அனைவரும் ஏற்கும் வகையில் ஓய்வூதியம் குறித்த நல்ல செய்தியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தைப்பொங்கலுக்குள்ளாக அறிவிப்பார் என அமைச்சர்கள் தெரிவித்தனர். மேலும், 6.5 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் 21 ஆண்டுகால ஏக்கத்தைப் போக்கும் வகையில்,  "2026 புத்தாண்டு  தொடங்கும் போது ஓய்வூதியம் குறித்த ஒரு நல்ல செய்தியை தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பார்" என்று  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

Advertisment

பேச்சு வார்த்தை நடத்திய அமைச்சர்கள் குழுவினருக்கும், ஊடக சந்திப்பில் அதனை உறுதிப்படுத்திய  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கும் இம்மாநில நிர்வாகிகள் கூட்டம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. திமுக ஆட்சிக் காலத்தில்தான் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் அடிப்படை வாழ்வாதாரக் கோரிக்கைகள் உட்பட அனைத்தும் வென்றெடுக்கப்பட்டுள்ளன என்பதை இம்மாநில நிர்வாகிகள் கூட்டம் பெருமையுடன் நினைவு கூர்ந்தது. 53,000 தொகுப்பூதிய ஆசிரியர்களை ஒரே கையெழுத்தில் காலமுறை ஊதியத்திற்கு மாற்றியது கலைஞர் தலைமையிலான திமுக அரசு. 2006 ஊதியக்குழு மாற்றத்தின் போது, விதிகளில் இடமில்லை என உயர் அலுவலர்களும், பிற சங்கங்களும் கைவிட்ட நிலையில், அப்போதைய துணை முதலமைச்சர் (இன்றைய முதலமைச்சர்)  எடுத்த உறுதியான முடிவால் 1.1.2006 முதல் 31.5.2009 வரை நியமிக்கப்பட்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஊதிய உயர்வு பலன்களைப் பெற்றனர்.

கடந்த அதிமுக ஆட்சியில் அரசு ஊழியர் ஆசிரியர் சங்கங்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அடிக்கடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதில்லை, ஒரே முறை பேச்சு வார்த்தையில் ஈடுபட்டாலும் அதில் எவ்வித கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டதில்லை, இந்த அரசு அமைந்தவுடன் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து, பலமுறை தற்போது அமைக்கப்பட்ட இதே அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தை நடத்தி, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின்  கவனத்திற்கு கொண்டு சென்று, கடந்த அதிமுக ஆட்சியில் பறிக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வை மொத்தமாக தொகுத்து ஒரே தவணையில் வழங்கியதும், சரண்டர் விடுப்பு ஒப்படைப்பு உள்ளிட்ட பறிக்கப்பட்ட சலுகைகளை நிதிப்பலன்களை மீண்டும் வழங்கியதுடன், கடந்த ஆட்சியில் ஒருங்கிணைக்கப்பட்ட பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வித் துறைகளைத் தனித்தனி அலகுகளாக பிரித்து நிர்வாகத்தைச் சீரமைத்திட காரணமாக இருந்தது. 

Advertisment

anbil-mahesh-mic-1

அனைத்து ஆசிரியர்களும் பெரும்பான்மையாக விரும்பாத ஆணையர் பணியிடத்தை ஒழித்து, விரும்பிய இயக்குனர் பணியிடத்தை கொண்டு வர காரணமாக இருந்தது தற்போதைய இந்த மூன்று அமைச்சர்கள் அடங்கிய பேச்சுவார்த்தை குழுவும் அதனை ஏற்று நடவடிக்கை மேற்கொண்டது  தமிழ்நாடு முதலமைச்சர் என்பதையும் நினைவு கூர்ந்து, மீண்டும் ஓய்வூதியத் திட்டத்தையும் இவர்களே சாத்தியமாக்குவார்கள் என நம்புகிறோம். ஜாக்டோ ஜியோ அமைப்பினை மறுக்கட்டமைப்பு செய்ததில் நமது இயக்கத்தின் பங்கும் அளப்பரியது. ஜாக்டோ ஜியோ முன்னெடுக்கும் ஒவ்வொரு போராட்டத்திலும் நாம் வீரியத்தோடு பங்கெடுத்திருக்கிறோம். அதனடிப்படையில் தொடர்ந்து ஜாக்டோ ஜியோவின் அனைத்து முன்னெடுப்புகளிலும் நாம் முன்னணியில் இருப்போம் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் இக்கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

CPS திட்டத்தை ரத்து செய்து  ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிவிப்பினை தமிழ்நாடு முதலமைச்சர் விரைவில் அறிவிப்பார் என்ற நம்பிக்கையோடு பயணிக்கும் சூழலில்  இந்தக் கோரிக்கை நிறைவேறக் கூடாது எனச் சூழ்ச்சி செய்யும் சில சுயநல சக்திகளின் எண்ணங்களை முறியடித்து, 6.5 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஏற்கனவே ஓய்வு பெற்ற, இயற்கையெய்தி நிர்க்கதியாக இருக்கும், அவர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் அதற்கான வாய்ப்புகள் இன்னும் சில நாட்களே இருக்கிறது என்பதை கருத்திற்கொண்டு, தமிழக முதல்வருடன் நமக்குள்ள இணக்கமான சூழலை பயன்படுத்தி, சரியான திட்டமிடலுடன் ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று காணொளி வாயிலாக நடைபெற்ற மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் மாநிலத் தலைவர் கு. தியாகராஜன் வலியுறுத்தினார். இக்கூட்டத்தில் மாநில அமைப்புச் செயலாளர் ரமேஷ், மகளிர் அணிச் செயலாளர் வந்தனா, மாநில துணைச் செயலாளர் முருகன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.