தமிழக அரசின் சார்பில் அவ்வப்போது பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதோடு ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு மற்றும் கூடுதல் பொறுப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் மாநில அரசில் பணியாற்றி வரும் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் மத்திய அரசுப் பணிக்கும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூலம் பணியிட மாற்றமும் செய்யப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவைத் தலைமைச் செயலாளர் என். முருகானந்தம் இன்று (29.08.2025) வெளியிட்டுள்ளார். அந்த உத்தரவில், “பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வரும் அருண் ராஜ், சர்க்கரை துறை கூடுதல் இயக்குநராக நியமிக்கப்படுகிறார். காஞ்சிபுரம் சார் ஆட்சியராக பணியாற்றி வரும் மிருணாளினி, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்படுகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 9 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார் இன்று உத்தரவிட்டிருந்தார். அதன்படி, “அனிதா ஹூசேன் சிலை கடத்தல் தடுப்பு ஐஜியாகவும், லஷ்மி லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜியாகவும், சோனல் சந்திரா சென்னை வடக்கு போக்குவரத்து இணை ஆணையராகவும் நியமிக்கப்படுகின்றனர். ஜவஹர் சிபிசிஐடி பெருநகர எஸ்பியாகவும், சுகாசினி சென்னை மேற்கு போக்குவரத்து துணை ஆணையராகவும் நியமிக்கப்படுகின்றனர்.
மேலும் பதவி உயர்வு மூலம் திவ்யா கோவை மாநகர தலைமையிடத்துத் துணை ஆணையராகவும், ஷாஜிதா சிபிசிஐடி ஒருங்கிணைப்பு எஸ்பியாகவும், விஜயகுமார் சென்னை தெற்கு போக்குவரத்து துணை ஆணையராகவும், பண்டி கங்காதர சென்னை கிழக்கு சட்டம் ஒழுங்கு துணை ஆணையராகவும் நியமிக்கப்படுகின்றனர்” எனத் தெரிவிக்கப்பட்டது. நேற்று (28.08.2025) 7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.