தமிழ்நாட்டில் உள்ள ஊரக உள்ளாட்சிகளில் எல்லைகளுக்கு உட்பட்டு வரும் கடைகளுக்குத் தொழில் உரிமம் வழங்குவது தொடர்பாக புதிய விதிகளை உருவாக்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்களின் குடோன்கள், டீக்கடைகள், உணவகங்கள் தங்கும் இடங்கள் திருமண மண்டபங்கள் சிறு அரங்குகள் மற்றும் இறைச்சி கூடங்கள் என வகைப்படுத்தப்பட்டு தனித்தனியாகக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது ஊரக உள்ளாட்சி பகுதிகளில் தொழில் உரிமங்கள் வழங்குவது தொடர்பாக  புதிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

Advertisment

அந்த வகையில் சிறு குழு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் முதலீட்டுத் தொகையின் அடிப்படையில் நகரங்களை ஒட்டியுள்ள ஊராட்சிகளில் ரூ. 1000 முதல் ரூ. 50 ஆயிரம் வரையிலும் உரிமக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற ஊராட்சிகளில் ரூ. 250  முதல் ரூ. 35ஆயிரம் வரை கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள ஊராட்சிகளில் செயல்பட்டு வரும் வணிக நிறுவனங்களுக்கு ரூ. 700 முதல் 10 ஆயிரம் வரையிலும், மற்ற ஊராட்சிகளில் ரூ. 500 முதல் ரூ. 7 ஆயிரம் வரையிலும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் டீக்கடைகள் மற்றும் உணவகங்களுக்கு ரூ. 500 முதல் ரூ. 10 ஆயிரம் வரையிலும், தமிழ்நாடு உணவு விடுதிகள் சட்டத்தின் கீழ் உரிமம் பெற உணவகங்களுக்கு ரூ. 700 முதல் ரூ. 3 ஆயிரத்து 500 வரையிலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திருமண மண்டபங்களுக்கு ரூ. 2 ஆயிரம் முதல் ரூ. 30 ஆயிரம் ரூபாய் வரையிலும், தனியார் வாகன நிறுத்தங்களுக்கு ரூ. 1,500 முதல் ரூ. 18 ஆயிரம் வரையிலும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் தமிழ்நாடு பொதுச் சுகாதார சட்டத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்ட தங்கும் விடுதிகளுக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ. 30 ஆயிரம் வரையிலும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.