தமிழகச் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் ஆயத்தமாகி வருகின்றனர். அந்த வகையில் அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு மற்றும் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் தான் தமிழக சட்டப்பேரவையின், 2026ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி மாதம் 20ஆம் தேதி, ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. 

Advertisment

அப்போது தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்ற தனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதைக் காரணம் காட்டி, உரை நிகழ்த்தாமல் ஆளுநர் ஆர்.என். ரவி அவையிலிருந்து வெளியேறினார். இதனையடுத்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது ஜனவரி 22, 23ஆம் தேதிகளில் விவாதம் நடைபெற்றது. விவாதத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலளித்து பேசினார். அதன்படி இக்கூட்டத்தொடர் ஜனவரி 24ஆம் தேதி வரை நடைபெற்றது. அதன் பின்னர் சட்டப்பேரவை தேதி குறிப்பிடபடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. 

Advertisment

இந்நிலையில் 2026 - 2027ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று (17.02.2026) காலை 09:30 மணிக்கு மீண்டும் கூடுகிறது. அப்போது நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால்  இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படுகிறது. அதனை தொடர்ந்து இடைக்கால வேளான் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய உள்ளார். அதே சமயம் தேர்தல் காரணமாக பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் எனவும் தமிழக மக்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.