இந்த ஆண்டுக்கான தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் மாதம் 20ஆம் தேதி (20.10.2025) நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட உள்ளது. முன்னதாக தீபாவளி பண்டிகைக் காலங்களின் போது சென்னையில் உள்ள பாரிமுனையில் உள்ள என்.எஸ்.சி. போஸ் சாலை, பந்தர் தெரு, ஆண்டர்சன் தெரு மலையபெருமாள் தெரு உள்ளிட்ட 7 தெருக்களில் பட்டாசுக் கடைகள் மூலம் பட்டாசுகள் விற்பனை நடைபெற்று வந்தது.
இத்தகைய சூழலில் தான் கடந்த 2006ஆம் ஆண்டு முதல் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தீபாவளிக்கான பட்டாசுக் கடைகள் அனைத்தும் தீவுத்திடலுக்கு மாற்றப்பட்டது. அதாவது தீபாவளி பண்டிகைக்காகத் தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் ஆண்டுதோறும் சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பந்தர் தெரு, ஆண்டர்சன் தெரு உள்ளிட்ட 7 தெருக்களில் பட்டாசு விற்பனை செய்தவர்களுக்குத் தீவுத்திடலில் தனி இடம் ஒதுக்கக் கோரி சென்னை பட்டாசு விற்பனையாளர் நலசங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதனையடுத்து இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி அமர்வில் இன்று (23.09.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், “தீவுத் திடலில் பட்டாசுக் கடைகளுக்கு இன்னும் ஒரு வாரத்தில் இடம் ஒதுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளார்.