கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) விசாரணைக்கு எதிரான மனுக்கள், சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் மீதான விசாரணை உள்ளிட்ட 5 வழக்குகளில் விசாரணையானது உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜே.கே. மகேஷ்வரி மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (10.10.2024) நடைபெற்று வருகிறது. இதில் தமிழக அரசு சார்பில் அபிஷேக் மனு சிங்வி, முகுல் ரோத்தகி, வில்சன், ரவீந்தரன் என 4 வழக்கறிஞர்கள் ஆஜராகியுள்ளனர். அதே சமயம் விஜய் சார்பாக தாமா சேஷாத்ரி, கோபால் சங்கர் நாராயணன் ஆகியோர் ஆஜராகியுள்ளனர்.
அதன்படி த.வெ.க. தரப்பில் வாதிடுகையில், “கரூர் சம்பவத்தில் விசாரணை நடத்தப்படுவதை நாங்கள் எதிர்க்கவில்லை. உச்ச நீதிமன்றமே சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) அமைத்து விசாரணை நடக்கட்டும். அதனை முன்னாள் நீதிபதி மேற்பார்வையிடட்டும் தமிழ்நாடு காவல்துறையின் சிறப்பு விசாரணைக்குழுவை நாங்கள் ஏற்கவில்லை. கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் எதிர் மனுதாரராக இல்லாத விஜய்யை உயர்நீதிமன்ற விசாரணை நீதிபதி விமர்சித்துள்ளார். விஜய் குறித்து பல்வேறு கருத்துகளை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எங்கள் தரப்பின் விளக்கமே கேட்காமல் உயர்நீதிமன்றம் கருத்துகளை முன்வைத்துள்ளது. சம்பவம் நடந்ததும் கரூரில் இருந்து விஜய் மறைந்துவிட்டதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் போலீசாரின் கட்டாயத்திலேயே விஜய் வெளியேறினார்.
அதாவது காவல்துறையின் பாதுகாப்புடன் தான் விஜய் கரூரில் இருந்து வெளியேறினார். பரப்புரை பேருந்தின் அருகே நிறைய வாகனங்கள் வந்தபோது, ஒரு வாகனத்தில் மோதியுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள், “வழிகாட்டு நெறிமுறைகளை விசாரிக்கும் வழக்கு என்றால் இதனை உயர்நீதிமன்ற கிளையே விசாரித்திருக்கலாமே?. இந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையின் விசாரணையின் வரம்பிற்கு உட்பட்டது. சென்னை உயர் நீதிமன்றம் ஏன் விசாரணைக்கு எடுத்தது என விளக்கம் கொடுங்கள்” எனத் தெரிவித்தனர். மேலும் தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், “சென்னை உயர் நீதிமன்றம்தான் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.
அதோடு இந்த குழுவில் உள்ள அதிகாரிகளை சந்தேகப்பட எந்தக் காரணமும் இல்லை. அதன் தலைவரான ஐ.ஜி. அஸ்ரா கர்க், சி.பி.ஐ.யிலும் சிறப்பாக பணியாற்றியுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துக்கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை உணவு இடைவேளைக்காக ஒத்திவைத்தனர். எனவே பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் விசாரணை தொடங்கும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதற்கிடையே இந்த சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனின் தந்தை தரப்பில் வாதிடுகையில், “பாதிக்கப்பட்டவர் என்ற முறையில் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளேன். அரசு நியமித்துள்ள விசாரணைக் குழுவில் நம்பிக்கையில்லை. சி.பி.ஐ. விசாரணை தேவை” எனத் தெரிவிக்கப்பட்டது.