டாஸ்மாக்கில் முறைகேடு நடப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில், டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் மதுபான ஆலைகளில் கடந்த ஏப்ரல் மாதம் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஆயிரம் கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதே சமயம் அமலாக்கத்துறையின் இந்த சோதனையை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் மற்றும் தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அமலாக்கத்துறை நடத்திய சோதனை தேச நலனுக்கானது என்று கூறி தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறையின் சோதனை தொடர்பாகத் தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வில் இன்று (14.10.2025) விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு தரப்பில் வாதிடுகையில், “ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை எவ்வாறு விசாரணை நடத்த முடியும்?. ஊழல், லஞ்சம் பற்றி சிபிஐ விசாரிக்கலாம். ஆனால் அமலாக்கத்துறை விசாரிக்க அதிகாரம் இருக்கிறதா?. ஊழல், லஞ்சம் பற்றி விசாரிக்க அமலாக்கத்துறைக்கு எங்கிருந்து அதிகாரம் வந்தது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை பற்றி மட்டும்தான் அமலாக்கத்துறை விசாரிக்க அதிகாரம் உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து தலைமை நீதிபதி பிஆர் கவாய், “இந்த வழக்கில் குற்றவாளிகள் யாரேனும் கைது செய்யப்பட்டுள்ளனரா?” எனக் கேள்வி எழுப்பினார். முன்னதாக அமலாக்கத்துறையின் அதிகாரம் என்பது மாநில அரசின் கூட்டாட்சி தத்துவத்தை விட அதிகமானதா? என்ற கேள்வியைக் காலை அமர்வில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/10/14/sc-tn-govt-2025-10-14-20-27-51.jpg)