இந்தியப் பன்னாட்டு வர்த்தகப் பொருட்காட்சியையொட்டி (2025) டெல்லியில் நடைபெற்ற தமிழ்நாடு நாள் விழாவைத் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் நேற்று (15.11.2025) குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தார். அப்போது  ஈரோடு மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் கே.பிரகாஷ், பொள்ளாச்சி எம்.பி. க. ஈஸ்வரசாமி, தமிழ்நாடு அரசின் உள்ளுரை ஆணையர் ஆஷீஷ் குமார், மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் இயக்குநர் இரா.வைத்திநாதன், , இணை இயக்குநர் (நினைவகங்கள்) கு.தமிழ் செல்வராஜன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். 

Advertisment

இது தொடர்பாக மு.பெ. சாமிநாதன் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாவது, “தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து பொது மக்கள் பார்வைக்காக கைத்தறி துறை, தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சி கழகம், குறு சிறு நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை மூலமாக உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் குறித்தும் வேளாண்மை துறை சார்பில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை சந்தைப்படுத்துதல் குறித்த அரங்குகள் இந்திய பன்னாட்டு வர்த்தக பொருட்காட்சி இடம் பெற்றிருக்கின்றன. தமிழ்நாடு நாள் விழாவில் தமிழ்நாட்டின் பாராம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது. இந்த பன்னாட்டு வர்த்தக பொருட்காட்சியில் கடந்த ஆண்டு தமிழ்நாடு அரங்கிற்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது போல் இந்த ஆண்டும் சிறப்பு பரிசு கிடைக்கும் என்ற வகையில் இந்த அரங்கம் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. 

Advertisment

தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் தேசிய அளவில் சந்தைப்படுத்துவதற்கு இந்த பன்னாட்டு பொருட்காட்சி ஒரு நல்வாய்ப்பாக அமைந்துள்ளது” என்று தெரிவித்தார். மேலும், இந்தியப் பன்னாட்டு வர்த்தகப் பொருட்காட்சியில் பங்கேற்கும் அனைத்து மாநிலங்களும், தங்களது மாநில நாள் விழாவினை சிறப்புடன் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு நாள் விழா நேற்று (15.11.2025) பிரகதி மைதானத்தில் உள்ள திறந்தவெளி அரங்கத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் தமிழ்நாடு அரசு கலைப் பண்பாட்டுத் துறையின் சார்பில், தமிழ்நாட்டில் புகழ்பெற்ற கிராமியக் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் டெல்லியில் வசிக்கும் தமிழர்கள் உட்பட பல்வேறு மாநிலங்களைச் சார்ந்தவர்கள் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.