Advertisment

மற்ற மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!

cm-mks-1

மற்ற மாநில முதலமைச்சர்களுக்கும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (29.08.2025) கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், “1935ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்திலிருந்து குறிப்பிடத்தக்க வகையில் வடிவமைக்கப்பட்ட இந்திய அரசமைப்பானது, ஒன்றியத்திற்கும், மாநிலங்களுக்கும் இடையில் சிறந்ததொரு அதிகார சமநிலையுடன் கூடிய கூட்டாட்சி கட்டமைப்பினை உருவாக்கியது. இருப்பினும், பல ஆண்டுகளாக இந்த சமநிலை தொடர்ந்து மாற்றப்பட்டு வருகிறது. வலுவான ஒன்றியமும், வலுவான மாநிலங்களும் முரண்பட்டிருக்காமல், ஒன்றையொன்று சார்ந்து, ஒவ்வொன்றும் மற்றவற்றின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். 

Advertisment

1967ஆம் ஆண்டில், அன்றைய தமிழ்நாட்டின் முதலமைச்சருமான சி.என். அண்ணாதுரை, "இந்தியாவின் இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கும் அளவுக்கு ஒன்றியம் வலுவாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்த நாட்டின் பாதுகாப்பிற்கு ஒன்றியத்தைப் பொறுப்பேற்கச் செய்யத் தேவையான அனைத்து அதிகாரங்களும் ஒன்றியத்திடம் இருக்க வேண்டும். ஆனால், பாகிஸ்தானியர்களிடமிருந்தோ அல்லது சீனர்களிடமிருந்தோ இந்தியாவைப் பாதுகாக்க, ஒன்றிய அரசு இங்கு ஒரு சுகாதாரத் துறையை வைத்திருக்க வேண்டும் என்று அர்த்தமல்ல. அது எந்த வகையில் இந்தியாவின் இறையாண்மையை வலுப்படுத்துகிறது?. 

ஒன்றிய அரசிடம் கல்வித் துறை இருக்க வேண்டுமா? அங்குள்ள இராணுவ வீரர்களின் போர்த் திறனை அது எந்த வகையில் மேம்படுத்துகிறது?” என்றும் வினவியுள்ளார். அதேபோன்று, கலைஞர், "மாநிலங்களுக்கு சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி" என்ற கொள்கையைத் தொடர்ந்து ஆதரித்தார். 1969ஆம் ஆண்டு அவர் முதலமைச்சராக இருந்தபோது, ஒன்றிய-மாநில உறவுகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை அளித்திட நீதிபதி பி.வி. ராஜமன்னார் தலைமையில் முதல் குழுவை அமைத்தார். 1971ஆம் ஆண்டு இந்தக் குழு அளித்த அறிக்கை, இந்தியாவில் கூட்டாட்சி குறித்த விவாதங்களை வடிவமைப்பதில் ஒரு மைல்கல்லாக அமைந்தது. 1974ஆம் ஆண்டு, தமிழ்நாடு சட்டமன்றம், ராஜமன்னார் குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு, உண்மையான கூட்டாட்சி அமைப்புக்கு வழிவகுக்கும் வகையில் அரசமைப்பைத் திருத்துமாறு ஒன்றிய அரசை வலியுறுத்தி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை நிறைவேற்றியது. 

tn-sec

Advertisment

அதன் பின்னர், ஒன்றிய அரசு சர்க்காரியா கமிஷன் (1983 - 1988) மற்றும் புஞ்சி கமிஷன் (2007 - 2010) ஆகியவற்றை அமைத்தது. இவை இரண்டும் அதிகாரப் பகிர்வு குறித்து விரிவான முறையில் ஆராய்ந்தன என்றாலும், அவற்றின் பரிந்துரைகள் உண்மையான, சமநிலையான கூட்டாட்சிக் கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கு உதவிடவில்லை. இதற்கிடையில், தொடர்ச்சியான அரசியலமைப்பு திருத்தங்கள், யூனியன் சட்டங்கள் மற்றும் ஒன்றியத்தின் கொள்கைகள், அதிகார சமநிலையை ஒன்றிய அரசுக்குச் சாதகமாக படிப்படியாக சாய்த்துள்ளன. ஒன்றிய அரசில் உள்ள பெரிய அமைச்சகங்கள் மாநிலங்களின் செயல்பாடுகளில் தலையிட்டு, நிதிக் குழு அளிக்கும் மானியங்களுக்கான நிபந்தனைகள், ஒன்றிய நிதியுதவி திட்டங்களுக்கான ஒரே மாதிரியான வழிகாட்டுதல்கள், பணி வாரியாக கட்டாய ஒப்புதல்கள் மற்றும் திட்டங்களைச் செயல்படுத்தும்போது அவற்றின் ஒவ்வொரு கட்டத்திலும் தொடர் கண்காணிப்பு போன்றவற்றின் மூலம் மாநில முன்னுரிமைகளுக்கு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. அல்லது ஆணைகளை வெளியிடுகின்றன. 

இன்றைக்கு நாம் ஒன்றிய-மாநில அதிகாரங்களில் உள்ள இந்த முன்னேற்றங்களை தீர்க்கமாக மறுபரிசீலனை செய்து, உண்மையான கூட்டாட்சியை வலுப்படுத்தும் எதிர்கால கட்டமைப்பை உருவாக்குவதே காலத்தின் தேவை ஆகும். இந்த நோக்கத்தின் அடிப்படையில், ஒன்றிய-மாநில உறவுகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை அளித்திட, ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப்பைத் தலைவராகக் கொண்டும், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கே.அசோக் வரதன் ஷெட்டி மற்றும் முன்னாள் திட்டக் குழுத் துணைத் தலைவர் பேராசிரியர் மு. நாகநாதன் ஆகியோர்களை உறுப்பினர்களாகக் கொண்டும், உயர்நிலைக் குழு ஒன்றினை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. இக்குழுவின் பணி செம்மையுற அமையும் வகையில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பரிசீலிக்கப்பட்ட கருத்துக்களைப் பெறுவதற்கு ஏதுவாக, ஒரு கேள்வித்தாளை இக்குழு தயாரித்துள்ளது. கடந்த 23-8-2025 அன்று, ஒன்றிய - மாநில உறவுகள் குறித்த தேசிய கருத்தரங்கில், உயர்நிலைக் குழுவின் இணையதளத்தினை தான் தொடங்கி வைத்து, இணையவழி வினாத்தாள் படிவத்தினை வெளியிட்டது. அதனை https://hicusr.tn.gov.in என்ற இணையதளத்தில் காணலாம். 

இந்த விஷயத்தில் மாநில முதல்வர்களும், பல்வேறு கட்சித் தலைவர்களும் கவனம் செலுத்தி, உயர்நிலைக் குழுவின் வினாத்தாளினை ஆராய்ந்து, விரிவான பதில்களை வழங்கிட வேண்டும். அனைத்து மாநிலங்களின் ஒட்டுமொத்த விருப்பத்தைப் பிரதிபலிக்கும் ஒரு ஆவணத்தை வடிவமைப்பதிலும், நமது நாட்டின் கூட்டாட்சி அடித்தளங்களை வலுப்படுத்துவதிலும் மாநில முதல்வர்கள் மற்றும் கட்சித் தலைவர்களின் தீவிர பங்கேற்பு மிக முக்கியமானதாக விளங்கும். இந்த முயற்சி அரசியல் மற்றும் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு நிற்கிறோம். ஒன்றாக, நமது அரசியலமைப்பின் கூட்டாட்சி உணர்வைப் புதுப்பித்து, எதிர்கால சந்ததியினருக்கு வலுவான, ஒன்றுபட்ட மற்றும் உண்மையான கூட்டாட்சி கொண்ட ஒரு ஒன்றியத்தை வழங்குவோம்” எனத் தெரிவித்துள்ளார். 

committee Tamil Nadu government union government state governments chief ministers letter mk stalin
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe