ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.176 கோடி மதிப்பிலான 109 முடிவற்ற பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (03-10-25) திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து, ராமநாதபுரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு விழா ஒருங்கிணைந்த பேரூந்து நிலையம், பரமக்குடியில் கல்லூரி மாணவர்களுக்கான சமூக நீதி விடுதி கட்டிடம், கோவிலாங்குளத்தில் பள்ளி மாணவர்களுக்கான சமூக நீதி விடுதி, தங்கச்சிமடத்தில் மேல்நிலைப்பள்ளி கட்டிடங்களை திறந்து வைத்தார்.

Advertisment

பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “ராமநாதபுரம் மாவட்டம் பல்வேறு பெருமைகளுக்கு சொந்தமானது. மக்கள் நல்லிணக்கத்தோடு வாழும் மாவட்டம் ராமநாதபுரம். நெஞ்சை அள்ளும் அழகிய கடற்கரை மாவட்டம் ராமநாதபுரம். ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கு எதிராக போர் நடத்தி மாண்டு போன சேதுபதி மன்னரை பெருமைப்படுத்தும் வகையில், ராமநாதபுரம் ஆட்சிய வளாகத்திற்கு சேதுபதி நகர் என்று கலைஞர் பெயர் சூட்டினார். 1974ஆம் ஆண்டு தமிழ்நாடு உப்பு கழகத்தை ராமநாதபுரத்தில் தான் கலைஞர் தொடங்கினார். ஒரு காலத்தில் ராமநாதபுரம் மாவட்டம் என்றால், தண்ணீர் இல்லாத காடு என்று சொல்வார்கள். அந்த நிலைமை மாற்றி காட்டின அரசு தான் கலைஞர் தலைமையிலான அரசு.

Advertisment

இம்மாவட்டத்தில் குடிநீருக்காக தவித்த மக்களுக்கு ரூ.616 கோடி மதிப்பீட்டில் காவிரி கூட்டுநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. குடிநீர் பிரச்சனை என்பதால் விரைவாக இந்த திட்டத்தை முடிக்க வேண்டும் என்று நான் அதிகாரிகளிடம் சொன்னேன். அதன்படி, 2 ஆண்டுக்குள் மக்களுடைய குடிநீர் தேவையை நிறைவெற்றின ஆட்சி தான் நமது திமுக ஆட்சி. இதற்காக அந்த நேரத்தில் மாதத்திற்கு மூன்று முறையாவது இங்கு வந்து ஆய்வு நடத்தினேன். நான் முதல்வராக பொறுப்பேற்றவுடன், கூட்டு குடிநீர் விரிவுப்படுத்தும் விதமாக உத்தரவிட்டு இப்போது அந்த பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. பழைய திட்டத்தின் மூலம் 87,500 பேர் பயன்பெறுகிறார்கள். இப்போது விரிவுப்படுத்துகின்ற காரணத்தினால் 2 லட்சத்து 95 ஆயிரம் பேர் பயன்பெற போகிறார்கள்.

கடலோர மாநிலமான தமிழ்நாட்டில் ஆண்டுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் நடத்துகிற தொழிலாக மீன்பிடி தொழில் இருக்கிறது. அதில், 25 சதவீதம் இந்த மாவட்டத்தில் மட்டுமே நடக்கிறது. மீனவர்களுக்கு நாம் எவ்வளவு நலத்திட்டம் செயல்படுத்தினாலும், அவர்களுக்கு ஏற்படுகிற மிகப்பெரிய பிரச்சனை இலங்கை கடற்படையின் தாக்குதல் தான். அதற்கு எதிராக நாம் தொடர்ந்து கண்டிக்கிறோம், போராட்டம் நடத்துகிறோம். ஆனால், ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க அரசு மீனவர்களை காக்க எதுவும் செய்யவில்லை. கச்சத்தீவை மீட்பது தான் சரியான தீர்வாக இருக்கும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானத்தை நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பியிருக்கிறோம். அதை வைத்து ஒன்றிய பா.ஜ.க அரசு, இலங்கை அரசிடம் கோரிக்கை வைத்திருக்க வேண்டும். ஆனால், அதை செய்ய பா.ஜ.க அரசு மறுக்கிறது. கச்சத்தீவை தரமாட்டோம், என இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் பேசுகிறார். இதை மறுத்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எதுவும் பேசவில்லை.

Advertisment

தமிழ்நாட்டு மீனவர்கள் என்றாலே அவர்களுக்கு இளக்காராமாக போய்விட்டது. நாம் இந்தியர்கள் இல்லையா? தமிழ்நாடு, தமிழர்கள் என்றாலே ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு ஏன் கசக்குகிறது?. தமிழ்நாடு மீது வன்மம் காட்டுகிறார்கள். ஜிஎஸ்டி யால் நிதியுரிமை போய்விட்டது, நிதி பகிர்வில் ஓரவஞ்சனை, சிறப்பு திட்டத்தை எதுவும் அறிவிக்க மாட்டிக்கிறார்கள். பள்ளிக் கல்விக்காக நிதியை தரவில்லை, பிரதமர் பேரில் இருக்கக்கூடிய ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு நாம் தான் படி அளக்க வேண்டும். இதெல்லாம் பத்தாது என்று நீட், தேசியக் கொள்கை என்று கல்வி வளர்ச்சிக்கு தடை, கீழடி விவகாரத்திற்கு தடை. இப்படி தமிழ்நாட்டுக்கு வஞ்சகம் செய்வதையே ஒன்றிய பா.ஜ.க அரசு வழக்கமாக செய்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டை 3 முறை மிகப்பெரிய பேரிடர் தாக்கி ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்ட போதெல்லாம் உடனே வராத, நிதி தராத நிதியமைச்சர், இப்போது கரூருக்கு மட்டும் உடனே வருகிறார்.

மணிப்பூர் கலவரம், குஜராத் கலவரம், கும்பமேளா உயிரிழப்பு விவகாரத்திற்கு உடனே விசாரணை குழு அனுப்பாத பா.ஜ.க, கரூருக்கு மட்டும் உடனே அனுப்புகிறார்கள். இது தமிழ்நாடு மீதுள்ள அக்கறையால் அல்ல. அடுத்த ஆண்டு தேர்தல் வருவதால் அரசியல் ஆதாயம் தேடுவதற்காகவும், இதை வைத்து யாரையாவது மிரட்டலாமா என்பதற்காகவும் வருகிறார்கள். யாருடையாவது ரத்தத்தை உரிஞ்சி உயிர் வாழக்கூடிய ஒட்டுண்ணியாக தான் பா.ஜ.க இருக்கிறது. மாநிலங்களே இருக்கக்கூடாது என்று செயல்படுகிற ஒன்றிய பா.ஜ.கவுடன், எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய அதிமுக கூட்டணி அமைத்து அடிமை சாசனம் எழுதி கொடுத்து தலையாட்டி பொம்மையாக இருக்கிறார்கள். பா.ஜ.கவை அதிமுக ஆதரிப்பதற்கு ஏதாவது கொள்கை காரணம் இருக்கிறதா? ஏதாவது பொருள் காரணம் இருக்கிறதா?. மக்கள் நலன் அடிப்படை ஏதாவது இருக்கிறதா? குறைந்தபட்ச செயல்திட்டம் ஏதாவது இருக்கிறதா?. எதுவும் கிடையாது. தவறு செய்தவர்கள், தன்னுடைய தவறுகளில் இருந்து தப்பிப்பதற்காக வாஷிங் மெஷிங் தான் பா.ஜ.க. அந்த வாஷிங் மெஷினில் உத்தமர் ஆகிவிடலாம் என்று எடப்பாடி பழனிசாமி குதித்திருக்கிறார். அவரை எப்படி பயன்படுத்திருக்கிறார்கள் என்றால், கூட்டத்துக்கு கூட்டம் மேடைக்கு மேடை தன்னுடைய கூட்டணிக்கு யாராவது வருவார்களா என்று ஆள் சேர்ப்பதற்கான அசைன்மென்ட்டை கொடுத்திருக்கிறார்கள். அவரும், மைக் கிடைத்தால் போதும் என்று தங்களுக்கு பிடிக்காதவர்களை எல்லாம் விருப்பம் போல் திட்டி வருகிறார்.

தமிழ்நாடு மீதும், தமிழ்நாட்டு மக்கள் மீதும் உண்மையான அக்கறை கொண்ட யாரும் பா.ஜ.கவுடன் கூட்டணிக்கு சேர மாட்டார்கள். ஏனென்றால் நாட்டு மக்களை துண்டாடும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் கொள்கைகளை முழு வீச்சில் செயல்படுத்திருக்கிற அரசியல் முகம், அதிகார பலம் தான் பா.ஜ.க. பெருந்தலைவர் காமராஜரை கொல்ல முயற்சித்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவில் அவர்களுடைய செயல் திட்டத்தை வேகப்படுத்திருக்கிறார்கள்” என்று பேசினார்.