Advertisment

தமிழக பொறுப்பு டி.ஜி.பி. நியமன விவகாரம்; யு.பி.எஸ்.சி.க்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

dgp-venkatraman-supremecourt

தமிழகக் காவல்துறையின் மிக உயர்ந்த பதவியான சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி.யாக கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் தேதி (30.06.2023) முதல் சங்கர் ஜிவால் பணியாற்றி வந்தார். இத்தகைய சூழலில் தான் சங்கர் ஜிவால் கடந்த ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதியுடன் (31.08.2025) பணி ஓய்வு பெற்றார். இதற்கிடையே தமிழகத்தின் புதிய காவல்துறை தலைமை இயக்குநராக (பொறுப்பு) ஜி. வெங்கட்ராமன் ஐ.பி.எஸ். நியமிக்கப்பட்டார். இதனையடுத்து காவல்துறை தலைமையகத்தில் சங்கர் ஜிவால், பொறுப்பு டி.ஜி.பி.யாக பதவியேற்ற ஜி. வெங்கட்ராமனிடம்  முறைப்படி பொறுப்புகளை ஒப்படைத்தார். அதனைத்தொடர்ந்து பொறுப்பு டிஜிபியாக ஜி. வெங்கட்ராமன் கோப்புகளில் கையெழுத்திட்டுப் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார்.

Advertisment

முன்னதாக சட்டம் ஒழுங்கு டிஜிபி நியமனம் தொடர்பாக பிரகாஷ் சிங் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் சார்பில் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன. அதில், “ஒரு மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி. ஓய்வு பெறுவதற்கு முன், அடுத்த டிஜிபியாக பதவியேற்க உள்ளவரின் பெயர்கள் பரிந்துரைப் பட்டியலை 3 மாதங்களுக்கு முன்னதாக யு.பி.எஸ்.சி.க்கு அனுப்ப வேண்டும்” என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் இந்த உத்தரவை தமிழ்நாடு அரசு பின்பற்றவில்லை என தெரிவித்து சமூக செயற்பாட்டாளரும், மனித உரிமை ஆர்வலருமான ஹென்ரி திபேன் சார்பில் வழக்கறிஞர் பிரசன்னா என்பவர் தமிழ்நாடு அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்திருந்தார். அதில், “பிரகாஷ் சிங் வழக்கில் அளித்த தீர்ப்பிற்கு மாறாக தமிழ்நாடு அரசு தமிழகத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி நியமனம் நடந்துள்ளது. இது நீதிமன்ற அவமதிப்பாக கருத வேண்டும்” எனத் தெரிவித்து இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார். 

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (08.09.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகில் ரோத்தகி, “காவல்துறை டி.ஜி.பி. பதவிக்கு தன்னுடைய பெயரையும் பரிந்துரைக்க வேண்டும் எனக் காவல் அதிகாரி ஒருவர் மத்திய நிர்வாக தீர்ப்பாயம் முன் வழக்குத் தொடுத்துள்ளார். அதனால்தான் வழக்கமான டி.ஜி.பி.யை நியமனம் செய்ய முடியாத நிலையில் பொறுப்பு டிஜிபி நியமனம் செய்யப்படுகிறார்கள்” வாதிட்டார். அப்போது நீதிபதி, “ சம்பந்தப்பட்ட காவல் அதிகாரியின் மனுக்களைத் தள்ளுபடி செய்கிறேன். அதோடு தமிழகக் காவல்துறையின் டி.ஜி.பி. நியமன விவகாரத்தில் தமிழக அரசு அனுப்பியுள்ள பெயர் பட்டியலை யு.பி.எஸ்.சி. விரைவாகப் பரிசீலிக்க வேண்டும். இதனையடுத்து யு.பி.எஸ்.சி.யிடமிருந்து பெறப்பட்ட பரிந்துரையின் பெயரில் தமிழ்நாடு அரசு உரிய முறையில் டி.ஜி.பி.யை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டார். 

அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் வாதிடுகையில், “டி.ஜி.பி.யை நியமனம் செய்வது தொடர்பாக யு.பி.எஸ்.சி.க்கு கால வரம்பை நிர்ணயம் செய்ய வேண்டும்” என்ற கோரிக்கையை நீதிபதிகள் முன்பு முன் வைத்தார். அதற்குத் தலைமை நீதிபதி, “டி.ஜி.பி. நியமன விவாகரத்தில் யு.பி.எஸ்.சி.க்கு கால வரம்பை நிர்ணயம் செய்து உத்தரவிட முடியாது. ஆனால் டி.ஜி.பி. நியமனம் தொடர்பான பெயர் பட்டியலை இறுதி செய்து விரைந்து தமிழ்நாடு அரசுக்குப் பரிந்துரைக்க வேண்டும் என யு.பி.எஸ்.சி.க்கு உத்தரவிடுகிறேன்” எனத் தெரிவித்ததோடு மனுதாரரின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டது.

upsc tn govt Supreme Court police DGP dgp G Venkatraman
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe