Tissue paper stuck in baby's nose - mother's shocking confession Photograph: (kanyakumari)
பிறந்து 42 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை பெற்ற தாயே டிஷ்யூ பேப்பர் கொண்டு மூச்சை நிறுத்தி கொலை செய்த சம்பவம் கன்னியாகுமரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகேயுள்ள பாலூர் பகுதியைச் சேர்ந்தவர் பெனிட்டா ஜெயா அன்னாள். இவர் இன்ஸ்டா மூலம் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திஎ ன்பவருடன் பழகி திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து இருவரும் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில் கர்ப்பம் தரித்த பெனிட்டா ஜெயா அன்னாளுக்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. அதைத் தொடர்ந்து இருவரும் திண்டுக்கல் சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து பாலூர் கிராமத்திற்கு தன்னுடைய தாய் வீட்டிற்கு பெனிட்டா ஜெயா சென்றுள்ளார். கார்த்திக் திண்டுக்கல் சென்றிருந்த நிலையில் மீண்டும் வந்து பார்த்த பொழுது குழந்தையின் நெற்றியில் காயம் ஏற்பட்ட நிலையில் அசைவு இல்லாமல் கிடந்துள்ளது.
இதுகுறித்து பெனிட்டா ஜெயாவிடம் கேட்டபோது பால் கொடுத்துக் கொண்டிருக்கும் பொழுது கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டதாக முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளார். சந்தேகமடைந்த கார்த்திக் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை எடுத்துச் சென்றுள்ளார். அங்கு பரிசோதனை செய்ததில் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். உடனடியாக கருங்கல் காவல் நிலையத்திற்கு கார்த்திக் தகவல் கொடுத்தார்.
குழந்தையின் உடலைக் கைப்பற்றிய போலீசார் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டதில் குழந்தையின் நாசியில் டிஷ்யூ பேப்பர் இருந்தது தெரிந்தது. இதனால் குழந்தை கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதனடிப்படையில் தாய் பெனிட்டா ஜெயாவை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பெண் குழந்தை பிறந்ததால் தன்னுடைய மாமியார் ராசி இல்லாதவள் என்று அடிக்கடி திட்டியதாலும், குழந்தை பிறந்த பின் கணவன் அன்பாக நடந்து கொள்ளாததாலும் குழந்தையை கொன்றதாக தாய் பெனிட்டா ஜெயா அன்னாள் அதிர்ச்சி கொடுக்கும் வாக்குமூலத்தை கொடுடுத்துள்ளார்.