Tiruvallur train fire accident - important announcement released Photograph: (train)
சென்னை துறைமுகத்திலிருந்து எரிபொருள் ஏற்றிக்கொண்டு புறப்பட்ட சரக்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டு ரயில் பற்றி எரிந்து வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை துறைமுகத்திலிருந்து எரிபொருள் ஏற்றிக்கொண்டு புறப்பட்ட சரக்கு ரயில் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில் வந்த பொழுது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென பற்றிய தீயானது பல்வேறு பெட்டிகளுக்கு பரவியது. முன்னதாக உள்ளே இருக்கும் எரிபொருள் டீசலா அல்லது எண்ணெய்யா என்பது தெரியாத நிலையில் தற்போது சரக்கு ரயிலில் இருந்தது கச்சா எண்ணெய் என ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒரு பெட்டியில் தீப்பிடித்த நிலையில் தற்போது தீயானது எட்டு பெட்டிகளுக்கு பரவியுள்ளது. இதனால் அந்த பகுதியில் வானுயர கரும்புகை சூழ்ந்துள்ளதால் அந்த பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சுமார் பத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநிவாஸா பெருமாள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். அருகிலேயே இருளர் மக்கள் வசிக்கும் இருளர் குடியிருப்பு உள்ளது. அந்த பகுதியில் உள்ள மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக அந்த வழித்தடத்தில் இயக்கப்படுகின்ற ரயில்கள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளதால் ரயில் சேவைகளிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை இந்தியன் ஆயில் நிறுவனத்தில் இருந்து பெங்களூருக்கு வேகன் மூலம் எடுத்துச் செல்லப்பட்ட எரிபொருள் தீப்பற்றி எரிந்து வருவதாக ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. சரக்கு ரயிலில் மூன்று வேகன்கள் தண்டவாளத்தில் இருந்து விலகியதால் எரிபொருள் கசிந்து தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
சென்ட்ரலில் இருந்து காலை 5:50 மணிக்கு புறப்பட வேண்டிய மைசூர் வந்தே பாரத் ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் காலை 6 மணிக்கு புறப்பட வேண்டிய மைசூர் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலும் நிறுத்தப்பட்டுள்ளது. அரக்கோணம் வழியாக சென்னை சென்ட்ரல் நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரயில்கள் பாதி வழியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இந்த தீ விபத்தால் அந்த பகுதியில் ரயில் போக்குவரத்து சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் வசதிக்காக திருவள்ளூரில் இருந்து சென்னை, அரக்கோணம் மார்க்கத்தில் பத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதேபோல புறநகர் ரயில் சேவையை பொறுத்தவரையில் சென்னை சென்ட்ரலில் இருந்து ஆவடி வரை மட்டுமே புறநகர் மின்சார ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த தீ விபத்து சம்பவம் தொடர்பாக அவசர உதவிக்காக சென்னை சென்ட்ரலில் அவசர சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது.