Advertisment

திருப்பூர் எஸ்.எஸ்.ஐ. கொலை வழக்கு; என்கவுண்டரில் ஒருவர் உயிரிழப்பு!

ssi-encoun

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே குடிமங்கலம் பகுதியில், மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டம் அமைந்துள்ளது. இதில் மூர்த்தி, அவரது மூத்த மகன் தங்கபாண்டியன் மற்றும் இளைய மகன் மணிகண்டன் ஆகியோர் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகின்றனர். இவர்கள் மூவரும் நேற்று முன்தினம் (05.08.2025) இரவு குடிபோதையில் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதில், தங்கபாண்டியனும் மணிகண்டனும் சேர்ந்து தந்தை மூர்த்தியை கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதுகுறித்து அருகில் இருந்தவர்கள் காவல் அவசர உதவி எண் 100க்கு தெரிவித்தனர். 

Advertisment

இதனையடுத்து அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த குடிமங்கலம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேலுக்கு தகவல் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த தகவலையடுத்து உடனே அங்கு சென்ற சண்முகவேல், தந்தை - மகன் சண்டையைப் பிரித்து சமாதனம் செய்திருக்கிறார். அதே சமயம் போலீசார் வந்ததைப் பார்த்த மணிகண்டன், தோட்டத்தில் சென்று பதுங்கிக் கொண்டார். இந்த சம்பவத்தில் காயமடைந்த மூர்த்தியை ஆம்புலன்ஸில் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்த போது, மதுபோதையில் இருந்த மூர்த்தி, அவரது மகன்கள் தங்கபாண்டியன், மணிகண்டன் ஆகிய மூவரும் சேர்ந்து எஸ்.ஐ சண்முகவேலை வெட்டிக் கொலை செய்தனர். இந்த கொலை தொடர்பாக மூர்த்தி மற்றும் அவரது மகன் தங்கபாண்டி ஆகியோர் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சரணடைந்தனர். 

இந்நிலையில் தொடர்ந்து போலீசாரல் மணிகண்டன் தேடப்பட்டு வந்தார். அதே சமயம் அவர் சம்பவம் நடைபெற்ற குடிமங்கலம் சிக்கனூர் அருகே உள்ள உப்பாறு என்ற பகுதியில் பதுங்கி இருந்ததாக  போலீசாருக்கு தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அங்குச் சென்று அவரை கைது செய்து சம்பவ இடத்திற்கு அழைத்துச் செல்ல முற்பட்டனர். அப்போது அவர் எஸ்.ஐ. சரவணகுமார் என்பவரை அரிவாளால் தாக்கி காயம் ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் தற்காப்புக்காக மணிகண்டன் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர் இதில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் காயமடைந்த எஸ்.ஐ. சரவணகுமாரை உடுமலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

encounter incident police sub Inspector Tiruppur
இதையும் படியுங்கள்
Subscribe