திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள தனியார்ப் பள்ளி ஒன்றில் ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருபவர் பிரபாகரன். இவரது மனைவி கௌசல்யா (வயது 40). இந்த தம்பதியினருக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். அதே சமயம் இவர்களது குடும்பத்தில் அவ்வப்போது சண்டை ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் தான் கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக நேற்று வீட்டிலிருந்து கௌசல்யா வெளியேறியுள்ளார்.
அதன் பின்னர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் உள்ளே செல்லும் வழியில், தான் வைத்திருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து தனது உடலில் ஊற்றிக் கொண்டு உடனடியாக தீயைப் பற்ற வைத்துள்ளார். அதோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கிச் சத்தமிட்டவாறே அவர் ஓடியுள்ளார். அப்போது அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து உடனடியாக அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அவருக்கு உடலில் சுமார் 80% அளவிற்குத் தீக்காயங்கள் ஏற்பட்டு உடல் தீவிரமாகப் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கௌசல்யா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வீரபாண்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்ப பிரச்சனை காரணமாகப் பெண் ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது திருப்பூரில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Follow Us