திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட லண்டன் மிஷன் ரோடு பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் கொத்தூர் பகுதியைச் சேர்ந்த சின்னதம்பி என்பவரது மகன் முகிலன் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் அதே பள்ளியில் செயல்பட்டு வரும் விடுதியில் தங்கிப் படித்து வந்துள்ளார். இத்தகைய சூழலில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளி நிர்வாகம் சார்பில் முகிலனின் தந்தையை அழைத்து உங்கள் மகன் பள்ளிக்கு வரவில்லை எனத் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து விடுதியில் இருக்கும் முகிலன் வீட்டிற்கு வர வாய்ப்பில்லை. 

அதே சமயம் எதற்குப் பள்ளிக்கு வராமல் இருக்கிறார் என அதிர்ந்த பெற்றோர் இது குறித்துத் திருப்பத்தூர் நகரக் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் மாயமான மாணவன் முகிலனை போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். இதனையடுத்து நேற்று முன்தினம் (03.08.2025) முகிலன் பயின்று வந்த பள்ளி வளாகத்திற்குள் உள்ள பாதுகாப்பு வளையமிட்ட கிணற்றில் சடலமாக மிதப்பதைக் கண்டு அவரது பெற்றோருக்குத் தகவல் அளித்தனர். அதனைத் தொடர்ந்து போலீசார் மற்றும் பெற்றோர் அங்கு விரைந்து சென்று முகிலனின் சடலத்தை மீட்டனர். மர்மமான முறையில் உயிரிழந்த முகிலனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகப் பெற்றோர்கள் புகார் கூறியிருந்தனர். இது குறித்து திருப்பத்து நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

பாதுகாப்புக்காக இரும்பு கம்பிகளால் மூடப்பட்ட கிணற்றுக்குள் பள்ளி மாணவன் முகிலன் சடலமாக மீட்கப்பட்டது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் சக மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. மாணவனின் உடலைப் பார்த்துப் பெற்றோர் கதறி அழுதது அங்கிருந்தவர்கள் மத்தியில் மேலும் சோகத்தை ஏற்படுத்தியது. மற்றொரு புறம் மாணவனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே சமயம் உடன் பயிலும் நண்பர்கள் சரியாகப் பேசாத காரணத்தினால் முகிலன் தற்கொலை செய்திருக்கலாம் என்ற தகவலை காவல்துறையினர் உறவினர்களிடம் தெரிவித்தனர். 

இதைக் கேட்டு ஆத்திரமடைந்த உறவினர்கள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் இருந்து ஊர்வலமாகச் சென்று, “தனியார் பள்ளியைக் காப்பாற்றுவதற்காக தவறான தகவல்களை எங்களிடம் கொடுக்கிறார்கள். காவல்துறை எங்களுக்கு எதிராக செயல்படுகிறது.” என போலீசார் மீது குற்றம்சாட்டி, திருப்பத்தூர் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்நிலையில் கடந்த 2 நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று (05.08.2025) காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து, மாணவனின் உடலைப் பெற்றுக்கொள்வதாகப் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் காவல்துறை பாதுகாப்புடன் முகினின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் முகிலனின் உடலானது அவருடைய சொந்த ஊரான கொத்தூர் பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.