நவீன்குமார் - ஹரீஷ் - சக்தியரசு
கிருஷ்ணகிரி அடுத்த பாஞ்சாலியூர் அருகே உள்ள யாசின் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி எல்லம்மாள். இவர்களுக்கு பெரியசாமி என்ற மகனும், இரட்டையர்களான சுசிகா மற்றும் சுசிதா என இரு மகள்களும் இருந்தனர். இந்த நிலையில், கடந்த 2018-ஆம் ஆண்டு சுரேஷ் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து, சில மாதங்களில் இரட்டையர்களில் மூத்தவளான சுசிகா ஒரு விபத்தில் உயிரிழந்தார். இந்த நிலையில், எல்லம்மாள், தனது பத்தாம் வகுப்பு படிக்கும் மகன் பெரியசாமி மற்றும் ஏழாம் வகுப்பு படிக்கும் மகள் சுசிதா ஆகியோருடன் அதே யாசின் நகர் பகுதியில் வசித்து வந்தார்.
இந்த நிலையில், செப்டம்பர் 26-ஆம் தேதி மதியம், ஏழாம் வகுப்பு படிக்கும் சுசிதா, காலாண்டு தேர்வு முடிந்து பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்துள்ளார். அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மகன் பெரியசாமி, சிறப்பு வகுப்பில் இருந்துள்ளார். கடைசியாக, அன்று மதியம் 2:30 மணியளவில், எல்லம்மாள் மற்றும் மகள் சுசிதா இருவரும் விவசாய நிலத்திற்குச் சென்றுவிட்டு, அந்தத் தெரு வழியாக வீட்டிற்குச் செல்வதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். பின்னர், மாலை 5:00 மணியளவில், எல்லம்மாளின் தம்பியின் மனைவி கிரிஜா, எல்லம்மாளின் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, கழுத்தறுக்கப்பட்ட நிலையில், ரத்த வெள்ளத்தில் எல்லம்மாள் மற்றும் அவரது மகள் சுசிதா ஆகியோர் சடலமாகக் கிடந்தனர். இது குறித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த தாலுக்கா போலீசார் விசாரணை நடத்தினர். எஸ்.பி. தங்கதுரை, டி.எஸ்.பி. முரளி ஆகியோர் நேரில் சம்பவ இடத்திற்குச் சென்று, கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், மோப்பநாய், கைரேகை நிபுணர்கள், தடயவியல் துறையினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. எல்லம்மாளின் செல்போனை வைத்து, கடந்த சில மாதங்களில் அவரிடம் பேசியவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்தும் விசாரணை நடத்தப்பட்டது. எஸ்.பி. தங்கதுரையின் அறிவுறுத்தலின் பேரில், மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இருந்த அனைத்து டைரக்ட் எஸ்.ஐ.க்களும் சம்பவ இடத்திற்கு இரவோடு இரவாக வரவழைக்கப்பட்டனர். மேலும் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு 100க்கும் மேற்ப்பட்ட போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இதற்கிடையில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யாத காவல்துறையை கண்டித்து 27ம் தேதி மாலை உயிரிழந்த எல்லம்மாள், சுசிதா ஆகியோரின் சடலத்தை சாலையில் வைத்து அவரது உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில் குற்றவாளிகள் 3 பேரை தட்டி தூக்கிய போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.
குரும்பபட்டி மோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் நவீன்குமார். பிக்கப் வேன் ஓட்டுநரான இவர், பாஞ்சாலியூர் அருகேயுள்ள யாசின் நகர் பகுதியைச் சேர்ந்த பிரியங்காவை திருமணம் கொண்டார். இந்நிலையில், ஆறு மாதங்களுக்கு முன்பு, நவீன்குமாரின் நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த கார்பெண்டர் சத்தியரசுக்கு, பணம் தேவைப்பட்டதால், நவீன்குமாரிடம் வட்டிக்குப் பணம் வாங்கிக் கொடுக்குமாறு கேட்டுள்ளார் இதையடுத்து, நவீன்குமார், தனது மனைவி பிரியங்காவின் தம்பி சந்தோஷ் மூலம், யாசின் நகர் பகுதியில் வட்டிக்குப் பணம் வழங்கும் எல்லம்மாளிடம் சென்றுள்ளனர். சத்தியரசுவின் பைக் ஆவணங்களை அடமானமாக வைத்து, 10,000 ரூபாயை 10% வட்டியில் வாங்கியிருக்கிறார். இதில், வாரம் 1,000 ரூபாய் திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன், 1,000 ரூபாய் வட்டிப் பிடித்தம் போக, 9,000 ரூபாயை நவீன்குமார் சத்தியரசுவுக்கு கொடுத்துள்ளார்.
ஆனால், மூன்று வாரங்களுக்கு மட்டும் 3,000 ரூபாய் திருப்பிக் கொடுத்த சத்தியரசு, அதன் பிறகு வட்டி பணம் செலுத்தவில்லை. இதனால், எல்லம்மாள் நவீன்குமாரையும் சத்தியரசுவையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவமானகரமாகப் பேசி, பணத்தைத் திருப்பிக் கொடுக்குமாறு மிரட்டியுள்ளார். இதையெடுத்து, கடந்த வாரம் எல்லம்மாளின் வீட்டிற்கு நவீன்குமாருடன் சத்தியரசும் வந்துள்ளார். அப்போது, எல்லம்மாள், “பணத்தைக் கொடு, இல்லையென்றால் உன் பைக்கை இங்கேயே விட்டுவிட்டுப் போ” என்று கூறியதுடன், “7,000 ரூபாய் பணத்தைக் கொடுக்கத் துப்பில்லை, நீயெல்லாம் எதற்கு வாழ்கிறாய், எங்காவது போய் சாக வேண்டியது தானே?” என்று சத்தியரசுவை மட்டுமின்றி, நவீன்குமாரையும், “நீயெல்லாம் எதற்கு பணத்திற்கு ஜாமீன் நிற்கிறாய்?” என்று கூறி, அவமானகரமாகப் பேசியுள்ளார்.
இதையெடுத்து, “ஓரிரு நாட்களில் பணத்தைக் கொடுத்துவிடுகிறோம்” என்று கூறி, அங்கிருந்து சென்ற நவீன்குமார் மற்றும் சத்தியரசு, “நம்மை இவ்வளவு கேவலமாகப் பேசிய இவளை விடக் கூடாது, போட்டுத் தள்ளிடுவோம்” எனத் திட்டமிட்டுள்ளனர். அதன்படி, எல்லம்மாளைக் கொலை செய்ய, செப்டம்பர் 25-ஆம் தேதி இரவு 11:00 மணியளவில், மது போதையில், கையில் அருவாளுடன் எல்லம்மாளின் வீட்டிற்குச் சென்று, வீட்டின் கதவைத் தட்டியுள்ளனர். ஆனால், கதவு திறக்கப்படாததால், திரும்பி வந்துள்ளனர். பின்னர், அடுத்த நாள், செப்டம்பர் 26-ஆம் தேதி காலை 11:00 மணியளவில், நவீன்குமார், சத்தியரசு, காவேரிப்பட்டணம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த பிக்கப் வேன் ஓட்டுநர் ஹரிஷ் ஆகிய மூவரும், மது அருந்திவிட்டு கத்தியை இடுப்பில் சொருகிக்கொண்டு, எல்லம்மாளின் வீட்டிற்குச் சென்றுள்ளனர். அப்போது, ஆட்கள் நடமாட்டம் அதிகமாக இருந்ததால், திரும்பி வந்துள்ளனர்.
இந்த நிலையில், அதே நாள் மாலை 4:00 மணியளவில், மது போதையில் வீட்டிற்குச் சென்ற மூவரும், அங்கு ஷோபாவில் படுத்திருந்த எல்லம்மாளிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருக்க, சத்தியரசு, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் எல்லம்மாளின் கழுத்தை அறுத்துள்ளார். நவீன்குமாரும் ஹரிஷும் எல்லம்மாளின் கைகளையும் கால்களையும் பிடித்துக்கொண்டுள்ளனர். பின்னர், சத்தியரசு சரியாக அறுக்காததால், நவீன்குமார், சத்தியரசுவிடமிருந்து கத்தியை வாங்கி, எல்லம்மாளின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். சத்தம் கேட்டு, வீட்டின் படுக்கையறையில் தூங்கிக்கொண்டிருந்த 13 வயது சுசிதா எழுந்து வெளியே வந்து, கூச்சலிட முயன்றுள்ளார். சுசிதா இருப்பதை எதிர்பாராத அவர்கள், என்ன செய்வதென்று தெரியாமல், சத்தியரசு மற்றும் ஹரிஷ், சிறுமி சுசிதாவின் வாயைப் பொத்தி, கழுத்தை நெரித்துள்ளனர். இதில், சிறுமி மயங்கியுள்ளார்.
எல்லம்மாளின் வீட்டின் அருகிலேயே நவீன்குமாரின் மாமியார் வீடு இருந்ததால், “சிறுமி கண் விழித்தால் நம்மைக் காட்டிக்கொடுத்துவிடுவாள்” என நினைத்த நவீன்குமார், மயங்கிய நிலையில் இருந்த சிறுமி சுசிதாவின் வாயைப் பொத்தி, கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். பின்னர், எல்லம்மாளின் கழுத்தில் இருந்த இரண்டு செயின்கள், இரண்டு வளையல்கள், ஒரு மோதிரம் மற்றும் வீட்டில் இருந்த 50,000 ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு, சாவகாசமாக அங்கிருந்த வாஷ்பேசினில் கத்தி, கை மற்றும் உடைகளில் இருந்த ரத்தக் கறைகளைக் கழுவிக்கொண்டு, பைக்கில் வீட்டின் பின்வழியாகத் தப்பிச் சென்றுள்ளனர். பின்னர், காவேரிப்பட்டணம் தென்பெண்ணை ஆற்றிற்குச் சென்று குளித்துவிட்டு, ஆடைகளை மாற்றிக்கொண்டு, அவரவர் வீட்டிற்குச் சென்றுள்ளனர். மறுநாள், செப்டம்பர் 27-ஆம் தேதி காலை, காவேரிப்பட்டணம் பனகல் தெருவில் உள்ள உதயம் பவுண்ட் லிமிடெட் என்ற நகை அடகு கடைக்குச் சென்று, 4 சவரன் கொண்ட ஒரு செயினை அடகு வைத்து, 2,30,000 ரூபாயைப் பெற்றுள்ளனர். இதற்கிடையில், செல்போன் டவர் மற்றும் சிசிடிவி காட்சிகளை வைத்து, குற்றவாளிகளை உறுதி செய்த போலீசார், அவர்களைக் கைது செய்தனர். மேலும், நவீன்குமார் வீட்டில் வைத்திருந்த பணத்தையும், ஹரிஷ் வீட்டில் வைத்திருந்த நகைகளையும் பறிமுதல் செய்தனர். பின்னர், மூவர்மீதும் வழக்குப் பதிவு செய்து, கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
7,000 ரூபாய் பணத்திற்காக, தாயையும் 13 வயது மகளையும் கழுத்தை அறுத்து கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், 7 தனிப்படைகளை அமைத்து, கொலை நடந்த 30 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளைக் கைது செய்த காவல்துறையினரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.