கரூர் கூட்ட நெரிசல் மரணம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார், "கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் தவெகவின் செயலுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்தார். "நெரிசல் ஏற்பட்டபோது பொதுமக்களை குழந்தைகளை மீட்டிருக்க வேண்டும். ஆனால், அதை செய்யாமல் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முதல் தலைவர் வரை அனைவரும் சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து ஓடிவிட்டனர்.
மொத்த உலகமே இதற்கு சாட்சியாக உள்ளது. தவெக தலைவரும் நடிகருமான விஜயிடம் தலைமைத்துவ பண்புகள் இல்லாததால் தொண்டர்களை விட்டு விட்டு ஓடிவிட்டார். தனக்கு பின்னால் வந்தவர்களைப் பற்றி துளியும் கவலை கொள்ளாமல், அவர்களை மறந்து விட்டார். இந்த இழப்பிற்கு முழுக்க முழுக்க தவெகவினரே பொறுப்பேற்க வேண்டும்" என தவெக கட்சியை லெப்ட் ரைட் வாங்கினார்.
மேலும், விஜய் பயணித்த பிரசார வாகனத்தை பறிமுதல் செய்யாதது ஏன்? விஜய்க்கு எதிராக வழக்குப் பதிவு செய்யாதது ஏன்? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியிருந்தார். இந்த சூழலில், சோசியல் மீடியாவில் ஊடுருவிய விஜய் ரசிகர்கள் தங்களுடைய தலைவரை விமர்சிப்பவர்களை ஆபாச வார்த்தைகளால் திட்டித் தீர்த்து வருகின்றனர். நடிகை முதல் அனைவரையும் விமர்சித்துவந்த ரசிகர்கள் தற்போது விஜய்யை விமர்சித்த நீதிபதியையும் விட்டுவைக்கவில்லை.
நீதிபதி செந்தில்குமாரின் குடும்பப் பின்னணியைக் குறிப்பிட்டு அவருக்கு எதிராக பல்வேறு அவதூறு கருத்துகளை சமூக ஊடகங்களில் விஜய்யின் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.இந்த நிலையில், நீதிபதி செந்தில்குமாருக்கு எதிராக அவதூறு பரப்பியவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதன் நீட்சியாக, அவதூறு கருத்துக்களை வெளியிட்ட புதுக்கோட்டையைச் சேர்ந்த கண்ணன், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தவெக நிர்வாகி டேவிட் மற்றும் சென்னையைச் சேர்ந்த சசி ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அப்போது, கைது செய்யப்பட்ட மூவரும், "நாங்கள் தெரியாமல் அப்படி பேசிவிட்டோம். இனி இதுபோல் தவறு செய்யமாட்டோம். எங்களை விட்டுவிடுங்கள்" என மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளனர். தொடர்ந்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இது ஒருபுறம் இருக்க, பிரபல சமையல்கலைஞரும் நடிகருமான 'மாதம்பட்டி' டி. ரங்கராஜ், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் க்ரிசில்டாவிற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். தனது தனிப்பட்ட வாழ்க்கையை இழிவுபடுத்தும் விதமாக ஊடகங்களில் பொய்யான, தீங்கிழைக்கும் மற்றும் அவதூறான கருத்துகளைத் தெரிவிப்பதைத் தடுக்க, இந்த வழக்கை அவர் தொடுத்துள்ளார். அப்போது, அந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார்.. இப்போதெல்லாம் நீதிபதிகள் கூட இணையத்தில் கிண்டல் செய்யப்படுகிறார்கள். நீதிபதிகளை கூட சமூக வலைதள ட்ரோல்கள் விட்டுவைக்கவில்லை. இதை விடக்கூடாது. இது போன்ற விஷயங்களை சீரியஸாக எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.