தஞ்சாவூரில் குளத்தில் மூழ்கி மூன்று சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவேங்கட உடையான்பட்டி கீழத் தெருவை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவன் ஜஸ்வந்த், ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் பாலமுருகன், மாதவன் மூவரும் பள்ளிக்கூடத்திற்கு சென்று மாலை நீண்ட நேரமாக வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் பல்வேறு இடங்களில் மூன்று சிறுவர்களையும் தேடியுள்ளனர். நீண்ட நேரம் தேடியும் மாணவர்கள் கிடைக்கவில்லை.
இந்நிலையில் குளத்தின் கரையில் புத்தகப்பைகள் கிடப்பது தெரிந்தது. விசாரணையில் ஜஸ்வந்த், பாலமுருகன், மாதவன் ஆகிய மூவரும் ஆடைகள் மற்றும் புத்தகப்பை, செருப்புகளை குளத்தின் கரையில் வைத்து விட்டு குளிக்கச் சென்றது தெரிந்தது. குளத்தில் குளித்த பொழுது மூவரும் நீரில் மூழ்கி இறந்த நிலையில் மூவரிடம் சடலமும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி சிறார்கள் மூவர் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.