கேரளா மாநிலம், கொல்லம் மாவட்டம், நெடுவாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 33 வயதான அர்ச்சனா. இவர் தனது மூன்று குழந்தைகள் மற்றும் இரண்டாவது கணவர் சிவகிருஷ்ணனுடன் வசித்து வந்தார். அக்டோபர் 12 ஆம் தேதி இரவு, அர்ச்சனாவுக்கும் சிவகிருஷ்ணனுக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டது. இந்தத் தகராறு ஒரு கட்டத்தில் முற்றிய நிலையில், மது போதையில் இருந்த சிவகிருஷ்ணன், அர்ச்சனாவை உடல் ரீதியாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அர்ச்சனா, அக்டோபர் 13 ஆம் தேதி அதிகாலை, வீட்டின் பின்புறத்தில் இருந்த சுமார் 30 அடி ஆழமுள்ள பழைய கிணற்றில் தற்கொலை செய்துகொள்வதற்காக குதித்தார். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில், நெடுவாத்தூர் கிராமத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியைத் தொடங்கினர்.
அனுபவமிக்க 36 வயதான தீயணைப்பு வீரர் சோனி குமார் அர்ச்சனாவை மீட்பதற்காக கிணற்றுக்குள் இறங்கினார். கிணற்றுக்குள் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அர்ச்சனாவை மீட்டு மேலே கொண்டு வர முயன்றார். இதற்கிடையில், போதையில் இருந்த சிவகிருஷ்ணன், கிணற்றின் சுற்றுச்சுவர் மீது சாய்ந்து நின்று கொண்டிருந்தார். திடீரென, பழுதடைந்த கிணற்று சுவர் இடிந்து, அர்ச்சனா மற்றும் சோனி குமார் மீது விழுந்தது. இதில், சிவகிருஷ்ணனும் கிணற்றுக்குள் விழுந்தார்.
மீட்புப் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள், கிணற்றுக்குள் சிக்கிய மூவரையும் மீட்க சுமார் நான்கு மணி நேரம் கடுமையாகப் போராடினர். பழைய கிணற்றின் ஆழம் மற்றும் இடிந்த சுவரின் கற்கள் மீட்புப் பணியை மேலும் சிக்கலாக்கின. இறுதியில், அர்ச்சனாவும், சிவகிருஷ்ணனும் சடலமாக மீட்கப்பட்டனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சோனி குமார், கொல்லம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு உடனடியாக அனுப்பப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சோனிக்குமாரும் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம், நெடுவாத்தூர் கிராமத்தில் பெரும் அதிர்ச்சியையும், துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அர்ச்சனாவின் மூன்று குழந்தைகள் தற்போது உறவினர்களின் பராமரிப்பில் உள்ளனர். கொல்லம் மாவட்ட காவல்துறை, இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. மேலும், தீயணைப்புத் துறை, சோனி குமாரின் தைரியத்தையும், அவர் செய்த உயிர் தியாகத்தையும் பலரும் பாராட்டி அருகின்றனர்.