காஞ்சிபுரம் மாவட்டம், வல்லக்கோட்டை, காமராஜர் தெருவைச் சேர்ந்த பார்த்திபன் (வயது 24), ஒரகடம் சிப்காட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவர், தனக்குச் சொந்தமான உயர்ரக இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு சென்றிருந்தார். மறுநாள் காலை வெளியே வந்து பார்த்தபோது, வாகனம் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர், வீட்டின் அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, மூன்று மர்ம நபர்கள் பார்த்திபனின் இருசக்கர வாகனத்தின் பூட்டை உடைத்து, டோப் செய்து திருடிச் செல்வது பதிவாகியிருந்தது. இந்தக் காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு, பார்த்திபன் ஒரகடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, இருசக்கர வாகனத்தைத் திருடிய மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.
இப்பகுதியில், குறிப்பாக ஒரகடம்-சிங்கப்பெருமாள் கோயில் நெடுஞ்சாலை மற்றும் சிப்காட் பகுதிகளில் இரவு நேரங்களில் காவல்துறையின் ரோந்து பணி போதுமான அளவில் இல்லாததால், இதுபோன்ற திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதாக உள்ளூர் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இப்பகுதியில் காவல்துறை ரோந்து பணியைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.