கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள நாகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தினேஷ் மற்றும் வெங்கடேசன். இவர்கள் இருவரும், ஒரே இருசக்கர வாகனத்தில் கிழங்குமில் ஒன்றில் ஓட்டுநராக பணியாற்றி வந்த தங்கள் நண்பர் சிவசக்தியை அழைத்து கொண்டு ஒரே வாகனத்தில் மூவரும் வந்துகொண்டிருந்தனர்.

அப்போது, சின்னசேலம் அருகே தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் கொய்யாப்பழம் ஏற்றி வந்த  வாகனம், முன்னால் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது அதிவேகமாக மோதியது. மோதிய வேகத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற மூவரும் தூக்கி வீசப்பட்டனர். பின்னால் வந்த வாகன ஓட்டிகள் மற்றும் அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் அதிர்ச்சியில் ஓடிவந்து, தூக்கி வீசப்பட்டவர்களைப் பார்த்தனர். அவர்கள் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்த வேகத்தில் மூவரும் பலியாகியிருப்பது தெரிந்தது.

இந்நிலையில், விபத்தை ஏற்படுத்திய  வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். அங்கிருந்த பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். அதனை அடுத்து, சின்னசேலம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து, மூன்று பேரின் உடலையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்தை ஏற்படுத்தி உதவி செய்யாமல் தப்பி ஓடியதால், போலீசார் இது விபத்தா அல்லது திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலையா என்பதை அறியும் நோக்கத்தில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

ஒரே கிராமத்தைச் சேர்ந்த மூவர் வாகன விபத்தில் பலியாகியிருப்பது, கிராமத்தையும் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்களையும் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.