இந்தியாவில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் (NEET - National Eligibility cum Entrance Test) எனப்படும் நுழைவுத் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. ஆனால், இது கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவில் மண்ணை அள்ளிப்போடும் முயற்சி என்று தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றன. இதனால் மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி, தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்களும் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன.
இது ஒருபுறமிருக்க, எப்படியாவது மருத்துவராக வேண்டும் என்று நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகளில் சில மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், திண்டுக்கல்லில் நீட் தேர்வில் முறைகேடு செய்து ஒரு மாணவி மருத்துவப் படிப்பில் சேர்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், பழநியைச் சேர்ந்தவர் 55 வயதான சொக்கநாதர். தாராபுரத்தில் நில அளவையராக உள்ளார். இவரது மனைவி முருகேஸ்வரி. இந்தத் தம்பதியினருக்கு 19 வயது காருண்யா ஸ்ரீதர்ஷினி என்ற மகள் உள்ளார். பிளஸ் 2 படித்து முடித்த அவர், மருத்துவம் படிக்க ஆசைப்பட்டுள்ளார். அதற்காக சமீபத்தில் நடந்த நீட் தேர்வை எழுதிய காருண்யா ஸ்ரீதர்ஷினி 228 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றார். அதனால், அவருக்கு முதற்கட்ட மருத்துவக் கலந்தாய்வில் இடம் கிடைக்கவில்லை.
இதனால் விரக்தியடைந்த காருண்யா ஸ்ரீதர்ஷினி, மருத்துவ இடம் பெற வேண்டும் என்ற ஆசையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டார். அதன்படி, நீட் தேர்வில் தான் பெற்ற 228 மதிப்பெண்களை 456 என்று மாற்றி, தேர்ச்சி பெற்றதாக போலி சான்றிதழ் தயாரித்திருக்கிறார். அத்துடன், மருத்துவக் கலந்தாய்வில் திண்டுக்கல் மருத்துவக் கல்லூரியில் இட ஒதுக்கீடு கிடைத்ததற்கான சான்றிதழையும் போலியாகத் தயாரித்துள்ளார்.
பின்னர், அந்த போலி சான்றிதழ்களுடன் மருத்துவப் படிப்பிற்கான சேர்க்கைக்கு தனது பெற்றோருடன் மாணவி சென்றுள்ளார். பின்னர், அங்கு சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு, காருண்யா ஸ்ரீதர்ஷினிக்கு சேர்க்கையும் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மருத்துவ மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு வகுப்பு தொடங்கிய நிலையில், மாணவர் சேர்க்கை விவரங்கள் சென்னை மருத்துவக் கல்வி இயக்குநரகத்துக்கு அனுப்பப்பட்டன. அங்கு நடந்த சரிபார்ப்புப் பணியில், காருண்யா ஸ்ரீதர்ஷினி நீட் தேர்ச்சி மற்றும் கலந்தாய்வு இட ஒதுக்கீட்டுக்கான சான்றிதழ்களைப் போலியாகத் தயாரித்து மருத்துவப் படிப்பில் சேர்ந்திருப்பது கண்டறியப்பட்டது.
இது குறித்து, திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி முதல்வர் வீரமணி, மாவட்ட எஸ்.பி. பிரதீப்பிடம் புகார் அளித்தார். அதன்படி, வழக்குப் பதிவு செய்து, குற்றப்பிரிவு டி.எஸ்.பி. குமரேசன், இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி தலைமையிலான காவல்துறையினர் விசாரணை நடத்தி, மாணவி காருண்யா ஸ்ரீதர்ஷினி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த பெற்றோர் உள்ளிட்ட மூவரையும் கைது செய்தனர். பின்னர், மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மருத்துவப் படிப்பிற்காக லட்சக்கணக்கான மாணவர்கள் இரவு பகலாகப் படித்து வரும் நிலையில், திண்டுக்கல் மாணவி ஒருவர் முறைகேடாக மருத்துவப் படிப்பில் சேர்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/10/08/2-2025-10-08-18-07-41.jpg)