தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மட்டுமில்லாமல் ஆளுநர் மாளிகை, பா.ஜ.க தலைமை அலுவலகம், நடிகர் திரிஷா, நடிகர் எஸ்.வி.சேகர் உள்ளிட்டோர் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு இன்று (03-10-25) காலை ஒரு மின்னஞ்சல் வந்துள்ளது. அதில் நடிகை திரிஷா வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை கண்ட போலீசார், உடனடியாக தேனாம்பேட்டையில் உள்ள திரிஷா வீட்டிற்கு மோப்பநாய் உதவியுடன் சென்று அங்கு தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இந்த விவகாரம் தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது போல், நேற்று இரவு டிஜிபி அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலமாக பல்வேறு இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல் வந்துள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது. குறிப்பாக சென்னையில் இருக்கக்கூடிய தமிழக முதல்வர் வீடு, ஆளுநர் மாளிகை, பா.ஜ.க தலைமை அலுவலகம், நடிகர் எஸ்.வி.சேகர் உள்ளிட்ட இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் வந்துள்ளாது. இது தொடர்பாக அனைத்து இடங்களிலும் போலீசார் சோதனை மேற்கொண்ட போது மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.