'Threats to the person who took the video' - Sensational letter to the DGP Photograph: (dgp)
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலின் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த அஜித்குமார் என்ற இளைஞர் நகை திருட்டு வழக்கில் போலீசாரால் தாக்கி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 01.07.2025 அன்று நடைபெற்ற விசாரணையில் பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிமன்றம், பல்வேறு உத்தரவுகளையும் பிறப்பித்திருந்தது. இந்த வழக்கில், 'மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் பால் சுரேஷ் நீதி விசாரணை நடத்த வேண்டும். இதற்காகத் திருப்புவனம் காவல் ஆய்வாளர், சப் இன்ஸ்பெக்டர், மாவட்ட எஸ்.பி. உள்ளிட்டவர்கள் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை மதுரை மாவட்ட நீதிபதியிடம் ஒப்படைக்க வேண்டும். காலம் செல்லச் சொல்ல, நாட்கள் ஆக ஆகச் சாட்சியங்கள் அழிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.
இந்த சம்பவம் நடந்த இடங்கள் ஏற்கனவே பாதுகாக்கப்படாமல் உள்ளது. எனவே இது போன்ற செயல்கள் மேற்கொண்டு இந்த வழக்கைப் பலமிழக்க, வலுவிழக்கச் செய்யும்' எனத் தெரிவித்து இந்த வழக்கை வரும் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் போலீசார் அஜித்குமாரை சுற்றி நின்று தாக்குவதை கோவிலின் கழிவறையிலிருந்து இளைஞர் ஒருவர் எடுத்த வீடியோ காட்சி நீதிமன்றத்தில் ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இந்த வீடியோ காட்சி இந்த வழக்கில் ஒரு பெரும் திருப்புமுனையாக இருந்தது. மதுரைக்கிளை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி மதுரை மாவட்ட நான்காவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி ஜான் சுந்தர் நேற்று வழக்கு தொடர்பான ஆதாரங்களை சேகரித்து விசாரணையை தொடங்கினார்.
இரவு 11 மணி வரை இந்த விசாரணை தொடர்ந்து நடைபெற்றது. திருப்புவனம் ஏ.டி.எஸ்.பி சுகுமார், திருபுவனம் காவல் ஆய்வாளர் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றது. இவ்வழக்கில் பதிவு செய்யப்பட்ட சிஎஸ்ஆர், எஃப் ஐ ஆர் மற்றும் காவல் நிலையம், கோவிலில் உள்ள சிசிடிவி காட்சிகளின் டி.வி.ஆர் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் தனிப்படை காவலர்கள் அஜித்குமார் மீது தாக்குதல் நடத்திய வீடியோவை பதிவு செய்த சக்தீஸ்வரனிடமும் விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில் சத்தீஸ்வரன் என்பவர் தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர் ராஜா பல ரவுடிகளுடன் தொடர்புடையவர். கடந்த 28ஆம் தேதி ராஜா தன்னை மிரட்டியுள்ளார். எனவே எனக்கும் என் குடும்பத்திற்கும் காவல்துறை பாதுகாப்பு வேண்டும்' என்று கடிதம் எழுதியுள்ளார்.