ஒடிசாவில் கிறிஸ்துவ பண்டிகையையொட்டி தொப்பி போன்ற பொருட்களை விற்பனை செய்த தெரு வியாபாரிகளை மதவாத கும்பல் மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ஒடிசாவில் உள்ள தெருயோரங்களில் கிறிஸ்துவ பண்டிகை தொடர்பான பொருட்களை வியாபாரங்களில் விற்பனை செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த இடத்தில் காரில் இருந்து இறங்கிய ஒரு கும்பல், ‘நீங்கள் எப்படி கிறிஸ்துவ மதம் சார்ந்த பொருட்களை விற்கலாம்?’ என்று கேள்வி எழுப்பி அந்த தெரு வியாபாரிகளை மிரட்டியுள்ளனர். இதேபோல் பாலக்காடு, உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், சட்டிஸ்கர் உள்ளிட்ட இடங்களிலும் தேவாலயங்கள் மீதும், கிறிஸ்தவர்கள் மீதும் தாக்குதல் நடந்துள்ளது.
இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு தமிழக ஆயர் பேரவை தலைவர் ஜார்ஜ் அந்தோணிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இந்தியாவில் மதச்சார்பின்மை என்பது அரசியலமைப்பின் அடிப்படைத் தூண்களில் ஒன்றாகும். இந்திய அரசியல் அமைப்பு அனைத்து மதங்களையும் சமமாகக் கண்டு, எந்த மதத்திற்கும் சிறப்புரிமை அளிக்காமல் நடப்பதை உறுதி செய்கிறது. ஆனால் சமீப காலங்களில் குறிப்பாக சிறுபான்மை மதத்தினருக்கு எதிரான தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள், பொய்ப் பிரச்சாரங்கள் போன்றவை நாட்டில் அதிகரித்து வருகின்றன.
குறிப்பாக கிறிஸ்தவ சிறுபான்மையினர் பல்வேறு இடங்களில் மத அடிப்படையிலான வன்முறைகள், தேவாலயங்கள் மற்றும் வழிபாட்டு இடங்களில் சேதப்படுத்தல்கள், மதமாற்றம் என்ற பெயரில் பொய்க் குற்றச்சாட்டுகள், சமூக சேவைகள் மீது சந்தேக பார்வை, நிர்வாக ரீதியான அழுத்தங்கள் போன்றவற்றை எதிர்கொண்டு வருகின்றனர்.
இத்தகைய நிகழ்வுகள் பெரும்பாலும் ஊடகங்களில் முழுமையாக வெளிச்சம் பெறாமல் போகின்றன.ஆனால் சிறுபான்மை மக்களின் வாழ்க்கையில் அவை ஆழமான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இத்தாக்குதல்களின் பின்னணியில் தீவிர மதவாத அரசியல், மத மாற்றம் குறித்த தவறான புரிதல்கள், மத சுதந்திரத்திற்கு எதிரான சட்டங்களை தவறாக பயன்படுத்துதல், சமூக ஊடகங்களில் பரவும் பொய்தகவல்கள் மற்றும் வெறுப்பு பேச்சுகள் ஆகியவை உள்ளன.
கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அந்த மதத்தினரை மட்டும் பாதிப்பதில்லை; அது இந்திய சமூகத்தின் ஒற்றுமை, மனிதநேயம் மற்றும் அரசியலமைப்பின் மதச்சார்பின்மை ஆகிய அடிப்படை மதிப்புகளையும் பாதிக்கிறது. குறிப்பாக இத்தகைய தாக்குதல்கள் சிறுபான்மை சமூகங்களில் பயம், பாதுகாப்பற்ற உணர்வு, சட்டத்தின் மீது நம்பிக்கை குறைதல், மதங்களுக்கு இடையிலான உறவுகளில் விரிசல் போன்ற விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
இந்த சவால்களுக்கு நடுவிலும், கிறிஸ்தவ சமூகம் பெரும்பாலும் அமைதியான, அரசியலமைப்புச் சட்டத்தின் வழிமுறைகளை பின்பற்றும் பதில்களையே அளித்து வருகிறது. சட்ட ரீதியான போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன; மதங்களுக்கு இடையிலான உரையாடல்கள் வளர்க்கப்படுகின்றன; சமூக சேவைகள் மேலும் வலுப்படுத்தப்படுகின்றன. இது கிறிஸ்தவ சமூகத்தின் பொறுமை மற்றும் ஜனநாயக நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
எனவே இந்தியாவில் கிறிஸ்தவர்களும் மட்டுமல்ல, அனைத்து சிறுபான்மை சமூகங்களும் பாதுகாப்புடன் வாழ அரசும், நீதிமன்றங்களும் அரசியலமைப்புச் சட்டத்தை கடுமையாக அமல்படுத்த வேண்டும். காவல்துறையும் நிர்வாகமும் பாரபட்சமின்றி செயல்பட வேண்டும். ஊடகங்கள் பொறுப்புடன் உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும். குடிமக்கள் வெறுப்பை அல்ல, மனித நேயத்தையே தேர்ந்தெடுக்க வேண்டும்.
அப்போதுதான் அனைவரும் சமத்துவத்துடனும் சுதந்திரத்துடனும் சகோதரத்துவத்துடனும் வாழும் ஒரு நாடாக இந்தியா திகழும். ஏனெனில் மத சுதந்திரம் என்பது ஒரு சமூகத்தின் உரிமை மட்டும் அல்ல; அது இந்திய ஜனநாயகத்தின் உயிர் நாடி. ஆகவே அமைதி, நீதி, சமத்துவம் மற்றும் மனித மரியாதை ஆகிய மதிப்புகளே இத்தகைய சவால்களுக்கு நிலையான தீர்வாக அமையும்.
இந்திய நாட்டின் சகோதர சமுதாயங்களை சார்ந்த குடிமக்களாகிய நாமெல்லோரும், வன்முறையை நிராகரித்து, வெறுப்புச் அரசியலை ஒதுக்கி, இந்த மண்ணில் அமைதியுடனும் ஒற்றுமையுடனும் வாழ உறுதி எடுப்போம் என்பதே அறிக்கையின் நோக்கமாகும்' என தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/27/5899-2025-12-27-15-39-53.jpg)