மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக போலீஸுக்கு புகார் ஒன்று கொடுக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், எம்.பியுமான நடிகர் கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் துணைத் தலைவரும் ஓய்வு பெற்ற ஐஜியுமான மவுரியா, இன்று (10-08-25) காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அந்த புகாரில், சமீபத்தில் நடிகர் சூர்யா சார்பில் நடத்தப்பட்ட அகரன் பவுண்டேஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கமல்ஹாசன் சனாதனத்திற்கு எதிராக பேசியதாகவும், அதனால் சமூக வலைத்தளங்களில் சின்னத்துரை நடிகர் ரவிச்சந்திரன் என்பவர் கமல்ஹாசனுக்கு எதிராக கொலை மிரட்டல் விடுத்ததாகவும், குறிப்பாக கமல்ஹாசனின் கழுத்தை அறுப்போம் என அவர் தெரிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அதில், கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுத்த சின்னத்துரை நடிகர் ரவிச்சந்திரன் மீது நடவடிக்கை எடுத்து உடனடியாக அவரை கைது செய்ய வேண்டும் எனவுன், அந்த காட்சியை ஒளிபரப்பிய தனியார் யூடியூப் சேனல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மவுரியா மட்டுமல்லாமல், 30க்கும் மேற்பட்ட மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்து சென்னை காவல் ஆணையரை நேரில் சந்தித்து ரவிச்சந்திரன் மீது புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு சூர்யா நடத்தி வரும் அகரம் அறக்கட்டளையின் 15வது ஆண்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், “அகரத்தில் கற்றவர்கள் மற்றவர்களுக்கு உதவ விரும்புவதாக சொல்வது நதி போன்றது. அது ஒரு நீட்சி. இந்த மேடையில் பார்த்த டாக்டர்கள் அடுத்த வருஷம் பார்க்க முடியாது. இதை நான் சொல்வது, நீண்ட நதி என்ற பார்வையில். அதே சமயம் இன்னொரு காரணமும் இருக்கிறது. 2017க்கு பிறகு இந்த நீட்சி தொடர முடியவில்லை. இப்போ புரியுதா ஏன் நீட் வேணாம்னு சொல்றோம்னு. 2017 முதல் இன்றைய தேதி வரை நிறைய மாணவர்களுக்கு கல்வி கிடைக்காமல் போய்விட்டது. அதற்கு காரணம் இந்த சட்டம். அந்த சட்டத்தை மாற்றி எழுத பலத்தை தருவது கல்வி தான். அந்த கல்வி இந்த போரில் ஆயுதமின்றி நாட்டையே செதுக்கவல்லது. இது சனாதன, சர்வாதிகார சங்கிலிகளை நொறுக்கித் தள்ளக்கூடிய ஆயுதம். இதைத் தவிர வேறு எதையும் கையில் எடுக்காதீங்க. அப்படி எடுத்தால் பெரும்பான்மை உங்களை தோற்கடித்து விடும். நின்று ஆண்டு கொண்டு இருப்பது தலைமை அல்ல. இது புரிய எனக்கு 70 வயது ஆகிவிட்டது” என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.