threat to actor Rajinikanth's house again
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. அதிலும் குறிப்பாக உள்ள பள்ளிகள், கல்லூரிகள், அரசியல் கட்சித் தலைவர்களின் வீடுகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் இ - மெயில் மூலம் வந்த வண்ணம் உள்ளன. இது தொடர்பாக போலீசார் நேரடியாக சோதனை செய்ததில் அனைத்தும் புரளி எனத் தெரியவந்துள்ளது. இருப்பினும், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு இன்று (16-11-25) மூன்றாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத பெண் ஒருவர், காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து நடிகர் ரஜினிகாந்த் மற்றும் திரைப்பட இயக்குநர் கே.எஸ் ரவிகுமார் வீட்டிற்கு இரண்டு பேர் வெடிகுண்டு வைத்திருப்பதாகக் கூறி போனை துண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அழைப்பின் எண்ணை வைத்து அந்த பெண்ணை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், மிரட்டல் புரளி என்பது தெரியவந்துள்ளது.
ஏற்கெனவே, ரஜினிகாந்த் வீட்டிற்கு இரண்டு முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்துள்ளதை தொடர்ந்து அந்த வீட்டிற்கு வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் சோதனை செய்ததில் அது புரளி என்பது தெரியவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us