ரஷ்யாவுடன் இந்தியா கச்சா எண்ணெய் வர்த்தகம் செய்துள்ளதாகவும், இந்தியா மிக அதிகமான வரி விதிப்பதாகவும் கூறி இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1 முதல் 25% வரி விதிக்கப்படுவதாக கடந்த ஜூலை 30ஆம் தேதி மாலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்தார். அமெரிக்காவில் இருந்து பால், நெய், கோதுமை, சோயா பீன்ஸ், ஆப்பிள், திராட்சை, சோளம் உள்ளிட்ட வகைகளை இந்தியாவில் விற்பனை செய்ய அந்த நாடு அனுமதி கோரியதாகவும், இவை அனைத்தும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவு தாணியங்கள் அதனால் இந்தியாவின் விவசாயிகள் நலன் பாதிக்கப்படும் என்று இந்தியா கூறி அதற்கு மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில், இந்தியா பொருட்களுக்கு 25% வரி விதிப்பு அறிவிப்பு நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகள் மீது அமெரிக்கா விதித்துள்ள புதிய வரி விதிப்பு வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. இதனிடையே, இந்தியாவை டிரம்ப் கடுமையாக விமர்சித்துப் பேசினார். இந்தியா பொருளாதாரம் இறந்து போய்விட்டதாகவும், உலகிலேயே அதிக வரியை இந்தியா விதிப்பதாக டிரம்ப் தொடர்ந்து பேசி வந்தார். இந்தியா குறித்து டிரம்ப் விமர்சித்தது குறித்து பிரதமர் மோடி உட்பட எந்த ஒன்றிய அமைச்சரும் பதிலளிக்காமல் மறுத்து வந்தனர்.
இந்த சூழ்நிலையில், கூடுதல் வரியாக 25 சதவீதத்தை உயர்த்தி இந்தியாவுக்கு மொத்தமாக 50% வரி விதிப்பதாக டிரம்ப் கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி அதிரடியாக அறிவித்தார். வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி பிரதமர் மோடி சீனா செல்ல உள்ள நிலையில், டிரம்ப்பின் இந்த அறிவிப்பு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அமெரிக்காவின் வரி 50% ஆக உயர்த்தப்பட்டிருப்பது தமிழ்நாட்டின் ஏற்றுமதியை கடுமையாகப் பாதித்துள்ளது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள பதிவில், அமெரிக்காவின் வரி 50% ஆக உயர்த்தப்பட்டிருப்பது தமிழ்நாட்டின் ஏற்றுமதியை கடுமையாகப் பாதித்துள்ளது. குறிப்பாக ஜவுளி மையமான திருப்பூரில் ஏற்றுமதி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கிட்டத்தட்ட ரூ.3,000 கோடி வர்த்தக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான வேலைகள் ஆபத்தில் உள்ளன.
நமது தொழில்கள் மற்றும் தொழிலாளர்களைப் பாதுகாக்க உடனடி நிவாரணம் மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்களை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்' என தெரிவித்துள்ளார்.