தலைநகர் டெல்லியின் முக்கிய அடையாளமாகச் செங்கோட்டை விளங்கி வருகிறது. இங்குள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் முதலாவது நுழைவாயில் அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று, நேற்று (10.11.2025) மாலை பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதனால், அருகே இருந்த சில வாகனங்கள் தீப்பற்றி எரிந்து தீக்கிரையாகி உருக்குலைந்தன. இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் அங்கு விரைந்து சென்று நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் டெல்லி மட்டுமல்லாது நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய சூழலில் தான் இரண்டு நாட்கள் அரசுமுறைப் பயணமாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பூட்டான் நாட்டிற்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் பூட்டான் நாட்டின் மன்னரின் 70வது பிறந்தநாள் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இந்நிலையில் பூட்டான் தலைநகர் திம்பு நடைபெற்ற விழாவ்பில் டெல்லி கார் வெடிப்பு குறித்து சம்பவம் குறித்து பிரதமர் மோடி கூறுகையில், “இந்த சம்பவத்திற்குப் பின்னால் உள்ள சதிகாரர்கள் தப்பவிடப்பட மாட்டார்கள்.
இதற்கு காரணமான அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். இன்று, நான் மிகவும் கனத்த இதயத்துடன் இங்கு வந்துள்ளேன். டெல்லியில் நேற்று மாலை நடந்த கொடூரமான சம்பவம் அனைவரையும் மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் துயரத்தை நான் புரிந்துகொள்கிறேன். முழு தேசமும் அவர்களுக்கு இன்று துணை நிற்கிறது. இந்த சம்பவத்தை விசாரித்த அனைத்து புலனாய்வு நிறுவனங்களுடனும் நேற்று இரவு முழுவதும் நான் தொடர்பில் இருந்தேன். இந்த சதியின் அடிப்படை மூலத்தை எங்கள் புலனாய்வு நிறுவனங்கள் கண்டுபிடிக்கும்” எனப் பேசினார்.
Follow Us