Advertisment

துபாயில் இறந்த இளைஞர்; தொழிலபதிபரை பலி வாங்கிய உறவினர்!

Tho

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே ஆலடியூரைச் சேர்ந்தவர் 75 வயதான தங்கராஜ். இவர் துபாயில் “நெல்லை சரவணா ஸ்டோர்ஸ்” என்ற பல்பொருள் அங்காடியை நடத்தி வந்தார். தொழிலதிபரான தங்கராஜ் தனது குடும்பத்தினருடன் துபாயிலேயே வசித்து வருகிறார். கோயில் திருவிழா மற்றும் முக்கிய சுப நிகழ்ச்சிகளுக்கு மட்டும் சொந்த ஊரான ஏரலுக்கு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தற்போது ஆலடியூர் அருகே ஆற்றங்கரைத் தெருவில் இவர் சொந்தமாக வீடு கட்டி வருகிறார். இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தங்கராஜ் ஆலடியூருக்கு வந்திருந்தார்.

Advertisment

டிசம்பர் 8-ஆம் தேதி நேற்றிரவு தொழிலதிபர் தங்கராஜ் புதிதாக வீடு கட்டும் இடத்துக்குச் சென்று பார்வையிட்டார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ஏரல் -முக்காணி மெயின் ரோடு வழியாக நடந்து வந்துகொண்டிருந்தபோது, அங்கு தயார் நிலையில் பதுங்கியிருந்த சிலர் அவரை வழிமறித்து அரிவாளால் மாறி மாறி சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடினர். இதில் கழுத்து மற்றும் தலைப் பகுதியில் பலத்த வெட்டுக் காயமடைந்த தொழிலதிபர் தங்கராஜ் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Advertisment

தகவல் அறிந்த ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி நிரேஷ், ஏரல் இன்ஸ்பெக்டர் பத்மநாபப் பிள்ளை ஆகியோருடன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தங்கராஜின் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் தொழிலதிபர் தங்கராஜை வெட்டிக் கொலை செய்தவர்கள் அதே ஊரைச் சேர்ந்த 68 வயதான முதியவர் மூக்காண்டி மற்றும் ஒருவர் எனத் தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியபோது, மூக்காண்டியின் மகன் 28 வயதான கோட்டாள முத்துவை வேலைக்காக தங்கராஜ் துபாய் அழைத்துச் சென்றது தெரியவந்தது. கடந்த 2022-ஆம் ஆண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கோட்டாளமுத்து இறந்ததாகக் கூறப்படுகிறது. அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டுவராமல் துபாயிலேயே அடக்கம் செய்துவிட்டார் தங்கராஜ். தனது மகன் மரணம் குறித்து சந்தேகமடைந்த மூக்காண்டி, உடலையும் சொந்த ஊருக்கு கொண்டுவராததால் கடும் ஆத்திரத்தில் இருந்து வந்தார். இதன் காரணமாகவே தங்கராஜை மூக்காண்டி வகையறா கொலை செய்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. இருப்பினும் இந்தக் கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா எனத் தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவாக இருக்கும் முதியவர் உள்பட இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

ஏரல் மெயின் பஜாரில் இரவு நேரத்தில் முதியவர் உள்பட இருவர் சேர்ந்து துபாய் தொழிலதிபரை வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-செய்தியாளர் : மூர்த்தி

crime Thoothukudi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe