சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய நுழைவு வாயில், கண்காணிப்பு கோபுரம். பார்வையாளர் மாடம், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பியப் பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மீண்டும் கொண்டுவரப்பட்டது. இதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (24.10.2025) திறந்து வைத்தார்.  இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், “சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் மூலம், 58 ஏக்கர் பரப்பினை கொண்ட அடையாறு உப்பங்கழியினை சீரமைத்து, 'தொல்காப்பியப் பூங்கா' உருவாக்கப்பட்டது. 

Advertisment

கலைஞரால் 2008ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. பின்னர், பூங்கா பணிகள் நிறைவுற்று 22.01.2011 அன்று கலைஞரால் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. கடந்த காலத்தில் முறையான பராமரிப்பின்றி இருந்த தொல்காப்பியப் பூங்காவினை மேம்படுத்திட ஜூலை 2021ஆம் ஆண்டு சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மூலமாக 'தொல்காப்பியப் பூங்கா மறுமேம்பாட்டு' பணிகளை மேற்கொள்ள திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, தொல்காப்பியப் பூங்காவின் மறுமேம்பாட்டு பணிகள் மேற்கொள்வதற்கு தமிழ்நாடு அரசு 42.45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிருவாக அனுமதி வழங்கியது.

Advertisment

அதன் தொடர்ச்சியாக, சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் மூலம் நவீன வசதிகளுடன் கூடிய புதிய நுழைவு வாயில், கண்காணிப்பு கோபுரம், பார்வையாளர் மையம், பார்வையாளர் மாடம். நடைபாதை, சிற்றுண்டியகம். புதிய கழிப்பறை, திறந்தவெளி அரங்கம். இணைப்புபாலம். கண்காணிப்பு கேமராக்கள். குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதி போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள்கே.என். நேரு, மா. சுப்பிரமணியன், பி. கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, தமிழச்சி தங்கபாண்டியன், சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் த.வேலு, ஜெ.கருணாநிதி, துணை மேயர் மு.மகேஷ்குமார், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.