விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் எம்.பி., சிதம்பரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், ஆசிரியர், ஊழியர் மற்றும் ஓய்வூதிய சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஊழியர்களுக்கு 15 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள மாத ஓய்வூதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் போன்ற 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தித் தொடர்ந்து பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களின் கோரிக்கைகளைத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கருணை உள்ளத்தோடு பரிசிலிக்க வேண்டும். 

Advertisment

அதேபோல் மகளிர் உரிமைத் தொகை தற்போது சிறப்புத் தொகையுடன் வழங்கி இருப்பதைக் கண்டு தமிழகப் பெண்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது அரசியல் அல்ல. மகளிர் தற்சார்பு உரிமையைப் பாதுகாக்கும் வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தாயுள்ளத்தோடு வழங்கியுள்ளார். இதனைத் தமிழக பெண்கள் மறக்க மாட்டார்கள். பாராளுமன்றத்தில் மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களைக் குறிவைத்துப் பணியிடை நீக்கம் செய்யும் வேலையில் மோடி அரசு செய்து வருகிறது. மேலும், எம்பிக்கள் மீது மக்களவை சபாநாயகர் அவதூறு கருத்துகளைப் பரப்புகிறார். இதனையொட்டி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஒன்றிணைந்து சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டாடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

Advertisment

அதேபோல் தமிழக முழுவதும் டாஸ்மாக் ஊழியர்கள், அரசு கல்லூரியில் கௌரவ விரிவுரையாளராக பணியாற்றுபவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் தற்போது தேர்தல் காலம் என்பதால் இதனையும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பரிசிலிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார். இவருடன் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர் ஊழியர் மற்றும் ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு நிர்வாகிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உடன் இருந்தனர்.