தமிழக சட்டமன்றத்திற்கு அடுத்த ஆண்டு தேர்தல் வரவுள்ள நிலையில், தேர்தல் களம் தற்போது முதலே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அரசியல் கட்சிகள் தங்களின் கூட்டணிக் கணக்குகள், வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம், பொதுக்கூட்டம், பரப்புரை என அடுத்தடுத்து தேர்தல் வேலைகளில் இறங்கியுள்ளன.
அந்த வகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, "மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற முழக்கத்துடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். ஒரு நாளைக்கு மூன்று தொகுதிகளில் பயணம் மேற்கொண்டு வரும் எடப்பாடி பழனிசாமி, மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து வருகிறார்.
இந்நிலையில் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ''அன்வர் ராஜா என்னுடைய நண்பர். எம்ஜிஆர் காலத்திலிருந்து அவர் அதிமுகவில் தொண்டராக இருந்தார். ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாக இருந்தவர். திமுகவிற்கு போனது ஒரு நண்பராக எனக்கு வருத்தம் அளிக்கிறது. தமிழ்நாடு இன்று இருக்கும் நிலைமையில் மக்களுக்கு நல்லாட்சி கொடுப்பதற்காக முயற்சி செய்திருக்கக் கூடிய கூட்டணியில் அமமுக சேர்ந்துள்ளது'' என்றார்.
'திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் ஜால்ரா கட்சிகள் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்' என்ற கேள்விக்கு, ''நீங்கள் ஏதாவது வார்த்தைகளை சொல்லி தர்மசங்கடத்தை ஏற்படுத்த விரும்பினால் அதற்கு நான் காரணமாக இருக்க மாட்டேன்'' என்றார்.
அப்பொழுது செய்தியாளர் ஒருவர் 'எடப்பாடி பழனிசாமி எல்லாக் கூட்டணிக் கட்சிகள் பெயர்களைச் சொல்கிறார் உங்கள் கட்சி பெயரை மட்டும் சொல்ல மாட்டேன் என்கிறார்' என்ற கேள்விக்கு, ''உங்கள் சந்தேகத்திற்கு எல்லாம் நான் பதில் சொல்ல முடியாது. நீங்கள் யாரிடம் அந்த கேள்வியைக் கேட்க வேண்டுமோ அவர்களிடம் கேட்க வேண்டும். உங்களுக்கு ஏற்கனவே தெரியும் நான் எந்த கூட்டணியில் இருக்கிறேன். 24 தேர்தலில் இதே இடத்திலிருந்து தான் பாராளுமன்ற பொதுத்தேர்தலின் போது மோடி அவர்கள் மூன்றாவது முறையாக பிரதமர் ஆனால் தான் இந்தியாவிற்கும் இந்தியாவின் நலன், பாதுகாப்பிற்கும் நல்லது என்று சொல்லி அன் கண்டிஷனல் சப்போர்ட் என்று சொல்லி உங்கள் முன்னிலையில் தான் ஆதரவைத் தெரிவித்தேன். அமமுக திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த தேர்தலில் உறுதியாகச் செயல்பட்டு வருகிறது'' என்றார்.
'கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு தர நங்கள் ஏமாளிகள் அல்ல' என்ற எடப்பாடி பழனிசாமியின் பேச்சு குறித்த கேள்விக்கு, ''நாங்கள் சொல்வது தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டு மந்திரி சபை தமிழ்நாட்டில் இந்த முறை அமையும். திமுக என்கிற தீய சக்தி வீழ்ந்து எங்களது கூட்டணி ஆட்சி வரும். அதில் பங்கு பெறுகின்ற அனைத்து கட்சிகளும் ஆட்சியில் அதிகாரத்தில் பங்கு பெறும் நிலைமை தமிழ்நாட்டில் ஏற்படும்'' என்றார்.