தாயுமானவன் திட்டத்தின் ஒரு அங்கமாக பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் நலனுக்காக 'அன்புக்கரங்கள்' திட்டத்தை தமிழக முதல்வர் சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கி வைத்தார்.
நிகழ்வில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ''உங்களை இன்னும் கவனிச்சிக்கத்தான் இந்த அன்புக்கரங்கள் திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். நான் இருக்கேன். உங்களை பத்திரமாக பார்த்துக்கொள்வேன். இன்று முக்கியமான நாள் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள். நம் தாய் நிலத்திற்கு 'தமிழ்நாடு' என்று பெயர் சூட்டிய தலைமகன் அண்ணாவின் பிறந்தநாள். ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என திராவிட மாடல் ஆட்சிக்கு இலக்கணம் எழுதியவர். அன்புக்கரங்கள் திட்டம் மூலம் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் 2,000 ரூபாய் வழங்கப்படும். இதன் மூலம் 18 வயது வரை இடைநிற்றல் இல்லாமல் கல்வியைத் தொடர இந்த திட்டம் வழிவகுக்கும். இங்கு இந்த திட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய குழந்தைகளின் சிரிப்புதான் அண்ணாவிற்கு நாங்கள் செலுத்தும் மரியாதை. மிகுந்த மன நிறைவில் இருக்கிறேன்.
எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கப் பாடுபடுவதும், போராடுவதும் அவ்வளவு எளிது அல்ல. இந்தியாவின் சமூக சூழலில் இவர்களுக்கெல்லாம் எதுவுமே தெரியாது, தெரியவும் கூடாது என ஒதுக்கப்பட்ட சாமானிய மக்களின் எழுச்சி தான் திராவிட இயக்கம். எங்களை பொறுத்தவரைக்கும் இங்கு சொகுசுக்கு இடமில்லை. நீங்களே பார்த்திருப்பீர்கள் காலையில் ஒரு இடத்தில் மக்களுடன் பேசிக் கொண்டிருப்பேன். ஈவினிங் பல கிலோமீட்டர் கடந்து இன்னொரு பகுதியில் மக்களுடன் இருப்பேன். இதைத்தான் அண்ணாவும், கலைஞரும் எங்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளனர்.
இப்படி மக்களோடு இருப்பதால்தான் கடைக்கோடி மக்களுக்கும் என்ன தேவை என்பதைப் பார்த்து பார்த்து செய்ய முடிகிறது. அரசியல் என்றால் சிலர் என்ன நினைக்கிறார்கள் என்றால் எதோ ஆட்சிக்கு வந்தோம்,பொறுப்பை மறந்து பதவி மோகத்தில் இருந்தோம், சில கவர்ச்சி திட்டங்களை செய்தோம், மீண்டும் பதவி மோகத்தில் தேர்தலுக்கு தயார் ஆவோம் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால் எங்களுடைய அடிப்படையே பதவி அல்ல பொறுப்பு தான்'' என்றார்.