'நடப்பாண்டிலும் இது தொடரக்கூடாது'-பாமக அன்புமணி கண்டனம்

a4246

'This should not continue in the current year' - PMK Anbumani condemns Photograph: (pmk)

மீன்பிடி தடைகாலம் முடிந்ததை தொடர்ந்து தமிழக மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் அதிகாலையிலேயே தமிழக மீனவர்கள் எட்டு பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீண்ட நாட்களாகவே மீன்பிடி தடை காலம் அமலில் இருந்த நிலையில் மீனவர்கள் மீதான இலங்கையின் கைது நடவடிக்கைகள் இல்லாமல் இருந்தது. மீன்பிடி தடைகாலம் முடிந்து தற்போது தமிழக மீனவர்கள் பல்வேறு பகுதிகளில் தீவிரமாக மீன்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் ராமேஸ்வரத்திலிருந்து புறப்பட்டு மீன் பிடிக்க சென்றனர். அதிகாலை 3 மணி அளவில் மீன் பிடித்து விட்டு கரை திரும்பி கொண்டிருக்கையில் மன்னார் வடக்கு கடற்பரப்பு பகுதியில் ரோந்து பணியில் இருந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஜேசு என்பவருடைய விசைப்படகை சிறைபிடித்து அதிலிருந்த எட்டு மீனவர்களையும் கைது செய்து தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

விசாரணைக்கு பின்னர் மீனவர்கள் எட்டு பேரும் மன்னார் மீன்வளத்துறை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவர் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கும் பாமகவின் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'வங்கக்கடலில் மீன் பிடித்து விட்டு கரைக்கு திரும்பிக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள்  8 பேரை கச்சத்தீவு அருகே இலங்கைக் கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தமிழக மீனவர்களுக்கு எதிரான சிங்களக் கடற்படையினரின் இந்த அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.

 

a4243
'This should not continue in the current year' - PMK Anbumani condemns Photograph: (pmk)

 

வங்கக் கடலில் மீன்பிடிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த 2 மாதத் தடைக் காலம் கடந்த 15-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், 16ஆம் தேதி முதல் தான் தமிழக மீனவர்கள் வங்கக்கடலில் மீன் பிடிக்கச் சென்று வருகின்றனர். இதுவரை 4 அல்லது 5 முறை மட்டுமே அவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று வந்திருப்பார்கள் எனும் நிலையில், இருமுறை  அவர்கள் மீது இலங்கை அரசின் ஆதரவுடன் இயங்கி வரும் கடல் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தினார்கள். இப்போது தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்திருக்கிறது.

தமிழக மீனவர்களை கைது செய்வதன் மூலமும், அவர்களிடம் உள்ள பொருட்களை கொள்ளையடிப்பதன் மூலமும் அவர்களின் வாழ்வாதாரங்களை சிதைப்பது தான் சிங்கள அரசின் நோக்கம் என்பதை பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறது. கடந்த  சில நாள்களில் தமிழக மீனவர்கள் மீது கடல் கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலும்,  இப்போது மேற்கொள்ளப்பட்டுள்ள கைது நடவடிக்கையும்  பா.ம.க.வின் நீண்ட நாள் குற்றச்சாட்டை உறுதி செய்திருக்கிறது. இது தொடரக்கூடாது.

தமிழ்நாட்டிற்கும், இலங்கைக்கும் இடையிலான கடல் பகுதி  மிகவும் குறுகலாக இருக்கும் நிலையில்,  தமிழக மீனவர்கள் இலங்கை கடல் பகுதிக்குள்ளும், இலங்கை மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள்ளும் நுழைந்து  மீன் பிடிப்பது  தவிர்க்க முடியாதது. இத்தகைய சூழலில் இரு தரப்பு மீனவர்களும் பயனடையும் வகையில்  வங்கக்கடலில் மீன் பிடிப்பதற்கான திட்டத்தை வகுப்பது தான் சரியானதாக இருக்கும். இதை மத்திய அரசு தான் செய்ய முடியும் எனும் நிலையில், அதற்கான அழுத்தத்தை தமிழக அரசு தான் தொடர்ந்து கொடுக்க வேண்டும்.

ஆனால், ஒவ்வொரு முறையும் மீனவர்கள் கைது செய்யப்படும் போதெல்லாம், அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது கடமையை முடித்துக் கொள்கிறார். மீனவர்கள் நலனில் அவருக்கு அக்கறை இல்லை என்பதையே அவரது செயல்பாடுகள் காட்டுகின்றன.

தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்வது, சிறையில் அடைப்பது, தண்டம் விதிப்பது போன்ற அத்துமீறல்கள் நடப்பாண்டிலும் தொடரக் கூடாது. அதற்காக தூதரக நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்வதற்கான அழுத்தத்தை  பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்துக் கொடுக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

anbumani ramadoss fisherman m.k.stalin modi pmk srilanka TNGovernment
இதையும் படியுங்கள்
Subscribe